ADDED : ஆக 02, 2025 02:03 AM

தமிழர்கள் கலாசாரத்தில் முக்கியமான மாதங்களில் ஆடி மாதமும் ஒன்று. இம்மாதத்தில் வரும் சிறப்பு நாட்களில், இனிப்பு தயாரித்து குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிட்டு வந்துள்ளோம். அத்துடன் ஆடி மாதம் என்றால் அனைவருக்கும் ராகி கூழ் தான் நினைவுக்கு வரும். இனிப்பு வகைகளில் 'கறுப்பு கவுனி அரிசி பாயசம்' முக்கியமானது.
செய்முறை கறுப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவி குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின், ஊற வைத்த அரிசியை, ஒரு குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நான்கு 'விசில்' வரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்
தேவை யான அளவு தேங்காயை அரைத்து, தேங்காய் பாலை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பாயசம் தயாரிக்க ஒரு பாத்திரத்தில் வேகவைத்த அரிசியை கொதிக்க வைத்து, அதில் தேங்காய் பாலை சேர்த்து கலக்கவும்.
ஐந்து நிமிடத்துக்கு பின், இதில் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து கரைய விடுங்கள். பின், மீண்டும் சிறிதளவு தேங்காய் பாலை ஊற்றி கிளற வேண்டும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க, பாயசம் கெட்டியாக மாறி வரும்.
இறுதியாக நாம் எடுத்து வைத்த தேங்காய் பால் மொத்தமும் இதில் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விட்டு ஏலக்காய் துாளை துாவ வேண்டும்.
அடுப்பை அணைத்து விட்டு, இதை இறக்கி வைத்து விடுங்கள்.
ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி, நெய் சூடு ஆனதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்த பின் பாயசத்தில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆடி ஸ்பெஷல் கறுப்பு கவுனி அரிசி பாயசம் தயார்.
சுவையான கறுப்பு கவுனி பாயசத்தை சூடாகவும் பரிமாறலாம் அல்லது சிறிது குளிர வைத்து பரிமாறலாம்
- நமது நிருபர் - .

