ADDED : ஜன 24, 2026 05:15 AM

- நமது நிருபர் -
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். அது உணவாக இருக்கலாம் அல்லது பொருட்களாக இருக்கலாம். கர்நாடகாவின் தாவணகெரே வெண்ணெய்க்கு பெயர் பெற்ற மாவட்டம் என்பது பலர் அறிந்ததே. ஆனால், தாவணகெரே தக்காளி பிரியாணிக்கும் பெயர் பெற்றது. இங்குள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் தக்காளி பிரியாணி சாப்பிடவே கூட்டமாக மக்கள் வருகின்றனர். சுவையான தக்காளி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
l ஆறு தக்காளி
l ஐந்து காய்ந்த மிளகாய்
l சின்ன வெங்காயம் 15
l ஒரு டம்ளர் பச்சை பட்டாணி
l ஒரு டம்ளர் பாசுமதி அரிசி
l ஒரு டம்ளர் சோனாமசூரி அரிசி
l தயிர் தேவையான அளவு
l பட்டை, ஏலக்காய், கிராம்பு, தேவையான அளவு
l எண்ணெய், கொத்துமல்லி தேவையான அளவு
l காய்ந்த தேங்காய் சிறிதளவு
l நான்கு பல் பூண்டு
l காஷ்மீரி கார பவுடர் இரண்டு டீஸ்பூன்
செய்முறை
அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கொத்துமல்லி, நறுக்கி வைத்திருக்கும் காய்ந்த தேங்காயை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கி ஆற வைத்ததும், மிக்ஸி ஜாரில் சேர்த்து தோல் உரித்த நான்கு பல் பூண்டையும் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் மீண்டும் குக்கர் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி, தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பட்டை, பச்சை பட்டாணி, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவிட வேண்டும்.
இதனுடன் சிறிதளவு கொத்தமல்லி இலை, புதினா இலை, உப்பு, மஞ்சள் பவுடர், கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் மசாலா, தயிர், காஷ்மீரி கார பவுடர் சேர்த்து கிளறி, நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
ஒரு முறை கிளறி விட்டு, நன்கு கழுவி வைத்திருக்கும் பாசுமதி, சோனா மசூரி அரிசிகளை சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து ஒரு முறை கிளறி விடவும். பின், குக்கரை மூடி இரண்டு விசில் அடித்ததும் அடுப்பை அணைக்கவும். அடுத்த 10 நிமிடம் கழித்து, குக்கர் மூடியை திறந்து பார்த்தால், சூடான, சுவையான தாவணகெரே ஸ்டைல் தக்காளி பிரியாணி ரெடி.

