ADDED : ஏப் 25, 2025 09:29 PM

சப்பாத்தி பலருக்கும் 'பேவரிட்' சிற்றுண்டி. பல வீடுகளில் மதியம் அல்லது இரவு உணவில் கட்டாயம் சப்பாத்தி இடம் பெறும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுகின்றனர். இரவில் அதிகமான சப்பாத்திகள் மிச்சமாகிவிடும். இவற்றை குப்பையில் வீசுவர்.
இனி குப்பையில் போட வேண்டாம். இரவில் மிச்சமாகும் சப்பாத்தியை வைத்து, காலை சிற்றுண்டிக்கு சுவையான 'சப்பாத்தி சாண்ட்விச்' செய்யலாம். மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.
செய்முறை
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை போன்று நன்றாக கிளறுங்கள். அதன்பின் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து கிளறவும். இதில் தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேருங்கள். இந்த கலவையில் உப்பு, மிளகு துாள், மிளகாய் துாள் போட்டு அடிபிடிக்காமல் கிளறி வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, சிறிதளவு வெண்ணெயை போடவும். கரைந்ததும் சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கமும் சூடாக்கவும்.
ஒரு சப்பாத்தி மீது ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள காய்கறி கலவை, கிரீன் சட்னி, வட்டமாக நறுக்கிய வெங்காயம், மெல்லியதாக நறுக்கிய சீஸ் ஸ்லைஸ், விரும்பினால் பன்னீர் துருவலும் போடலாம். அதன் மீது மற்றொரு சப்பாத்தியால் மூடவும்.
சீஸ் கரையும் வரை தோசைக்கல் மீது வேக வைக்கவும். அதன்பின் இதனை நான்காக வெட்டினால், சுவையான சப்பாத்தி சாண்ட்விச். கிரீன் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம். ஹோட்டலில் வாங்கியது போன்ற சுவையுடன் இருக்கும். காய்கறிகள் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தானதாக இருக்கும்.
- நமது நிருபர் -

