ADDED : ஜூன் 19, 2026 10:27 PM

- நமது நிருபர் -
இது, மாம்பழ சீசன். மாம்பழத்தில் பல விதமான தின்பண்டங்கள் செய்யலாம். மாவில் மட்டுமின்றி, மாம்பழத்திலும் சுவையான ஜாமூன் செய்யலாம். இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாமா...
தேவையான பொருட்கள்
l மாம்பழ கூழ் - அரை கப்
l ரவை - அரை கப்
l பால் - கால் கப்
l சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
l நெய் - 1 டேபிள் ஸ்பூன்
l ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
l சர்க்கரை பாகு செய்வதற்கு:
l சர்க்கரை - 1 கப்
l தண்ணீர் - 1.5 கப்
l ஏலக்காய் - 1 (தட்டியது)
l எலுமிச்சை சாறு - சில துளிகள்
செய்முறை:
பாகு தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை முழுமையாக கரைந்து, பிசுபிசுப்புத்தன்மை வரும் வரை, கொதிக்க விடுங்கள். இறுதியில் ஏலக்காய் துாள், எலுமிச்சைச்சாறு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
அதன் பின், வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றவும். சூடானதும் ரவையை சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுக்கவும். நிறம் மாறக்கூடாது.
இதில் மாம்பழ கூழ், சர்க்கரை போட்டு பால் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். கலவை கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வந்த பின், ஏலக்காய் துாள் சேர்த்து மாவை ஆற விடுங்கள்.
மாவு ஆறியதும் கையில் நெய் தடவி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். சூடானதும் மிதமான தீயில் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். இந்த உருண்டைகளை, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகில் போடவும். ஒன்று முதல் இரண்டு மணி நேரம் மூடி வைத்தால், சுவையான மாம்பழ ஜாமூன் தயார். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்!
