ADDED : ஆக 16, 2025 04:57 AM

மரவள்ளி கிழங்கை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம், உடலுக்கு பல ஆரோக்கியம் உள்ளது. கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடகில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. வைட்டமின் ஏ, சி சத்துகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், சரும பிரச்னைகளை குறைக்கவும் உதவுகிறது.
மரவள்ளிக்கிழங்கில் பொறியல், வறுவல், இனிப்பு தோசை, உப்புமா, பாயாசம், ஜவ்வரிசி உள்ளிட்ட உணவு வகைகள் செய்யலாம். மரவள்ளி கிழங்கை வைத்து சூப்பரான வடை கூட செய்யலாம். வீட்டில் உளுந்து வடை, பருப்பு வடை, வெங்காய வடை, வாழைப்பூ வடை என செய்து சாப்பிட்டு இருப்போம். மரவள்ளிக்கிழங்கை வைத்து வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை மரவள்ளிக்கிழங்கின் தோலை சீவி, சிறிதாக நறுக்கி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பை ஆன் செய்து, இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து, அதனுடன் அரிசி மாவு, நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்து கலந்து கொள்ளவும்.
மிக்ஸியில் பட்டை, சீரகம், கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து மரவள்ளிக்கிழங்குடன் சேர்ந்து கலந்து கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, வழக்கமாக வடை தட்டுவது போன்று, கையில் வைத்து தட்டி அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழக்கு வடை தயார். பட்டை, கொத்தமல்லி இலை சேர்ப்பதால் வாசனையும் துாக்கலாக இருக்கும்
- நமது நிருபர் - .

