ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் 'முருங்கை சதை தொக்கு'
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் 'முருங்கை சதை தொக்கு'
ADDED : மே 30, 2025 11:21 PM

முருங்கைக்காய் பல நன்மைகள் உள்ளடக்கிய சக்தி வாய்ந்த உணவு. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்சத்து என ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; எலும்புகளை பலப்படுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சுவாச கோளாறுகளுடன் போராட உதவுகிறது.
இத்தகைய முருங்கைக்காயை பெரும்பாலும் சாம்பாரில் பயன்படுத்துகிறோம். இதை வேகவைத்து உள்ளே இருக்கும் சதை, விதையை எடுத்து மசாலா எல்லாம் போட்டு கலந்து சமைத்தால், சுவையான முருங்கை சதை தொக்கு ரெடியாகிவிடும்.
செய்முறை
முதலில் 15 முருங்கைக்காயை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பாதி பாதியாக வெட்டி, குக்கரில் போட்டு, நான்கு 'விசில்' வரை வேகவிடுங்கள். அதன் பின், முருங்கைக்காய் உள்ளே உள்ள சதையை எடுங்கள்
வாணலியில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, 100 கிராம் சின்ன வெங்காயம் போட்டு, பொன்னிறத்துக்கு வறுக்கவும்
அதே எண்ணெயில், 8 காஷ்மீரி மிளகாய், மூன்று ஸ்பூன் தனியா விதை, அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் எள்ளு போட்டு வதக்கவும்
இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, 'பேஸ்ட்' போன்று அரைக்கவும்
வாணலியில் மற்றொரு முறை ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு, ஏற்கனவே மிக்சியில் அரைத்த பேஸ்டில், பாதி பேஸ்டை சேர்க்கவும்
அதன் பின், 50 கிராம் புள்ளியை தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடுங்கள்
அடுத்ததாக தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் பெருங்காய துாள், அரை ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர் சேருங்கள்
எண்ணெய் பிரிந்து வரும்போது, 25 கிராம் பவுடர் வெல்லம் போடுங்கள். இறுதியாக வேகவைத்த முருங்கை சதை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்கு கலந்துவிடுங்கள்
சுட சுட வெள்ளை சாதத்தில் முருங்கை சதை தொக்கு பிரட்டினால் அளவில்லாமல் சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள்
மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை பதப்படுத்தி ஒரு மாதத்திற்கு கூட பயன்படுத்தலாம்
- நமது நிருபர் -.