ADDED : மே 09, 2025 11:25 PM

10 நிமிடங்களில் ஆரோக்கிய உணவுகளை சமைப்பது குறித்து இந்த வாரம் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்லும் கணவருக்கு காலை, மதிய உணவு தயாரிப்பது 'குதிரை கொம்பாக' உள்ளது. எனவே, 10 நிமிடங்களில் ஆரோக்கிய உணவுகளை சமைக்கலாம்.
உருளைக்கிழங்கு சாதம்
குழந்தைகளுக்கு காய்கறிகளில் பிடித்தது உருளைக்கிழங்கு. இதில் சாதம் செய்வது மிகவும் எளிது. உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கூடுதலாக கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது உருளைக்கிழங்கை கடாயில் எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்த பின், நறுக்கி வைத்த கேரட், பட்டாணி, பீன்ஸ் சேர்த்துக் கிளற வேண்டும்.
சுவைக்கு ஏற்ப உப்பு, மிளகாய் துாள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை பொரியல் போன்று சமைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுபுறம் சாதத்தை வடித்து, இந்த உருளைக்கிழங்கு பொரியலில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். 10 நிமிடங்களில் சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.
பன்னீர் மட்டர் சாதம்
இந்த பன்னீரை சாப்பிட குழந்தைகளிடம் நீங்கள் கெஞ்ச வேண்டாம். ஏனெனில், அவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். சிறிதளவு பன்னீர், பட்டாணி சேர்த்து, ஒரு பொரியல் போன்று சமைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது வடித்து வைத்த வெள்ளை சாதத்தை, இந்த பன்னீருடன் சேர்ந்து கலந்து கொடுத்தால், பன்னீர் மட்டர் சாதம் தயார்.
குடைமிளகாய் சாதம்
நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு காய்கறி தான் குடை மிளகாய். இதில் நார்ச்சத்து அதிகளவில் நிறைந்து உள்ளது. உணவு செரிமானத்துக்கு பெரிதும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் பேக் செய்யும்போது, கலர்புல்லாக காய்கறிகளை வைத்து, சமைத்துக் கொடுத்தால், வீணாக்காமல் சாப்பிடுவர். அந்த வகையில் குடைமிளகாய் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் உங்களுக்கு கிடைக்கும்.
முதலில் குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சிறிதளவு வேகவைத்த மக்காச்சோளம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
குடைமிளகாய் வெந்த பின், நாம் எடுத்து வைத்துள்ள மக்காசோளத்தை சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது வடித்து வைத்த சாதத்துடன், குடைமிளகாய் பொரியலுடன் சேர்த்து கலந்து கொடுத்தால் குடைமிளகாய் சாதம் ரெடி.
- நமது நிருபர் -

