ADDED : டிச 13, 2025 06:50 AM

தென்மாநில காலை உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை, இட்லி உள்ளது. இட்லியை விட தோசை பிரியர் அதிகமாக உள்ளனர். விதவிதமான சட்னியுடன் எத்தனை தோசை சுட்டு கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிட்டே இருப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனியன், ரவா, மசாலா, கேரட், முட்டை என்று தோசையிலும் பல வகைகள் உள்ளன. கத்திரிக்காயை வைத்து சூப்பரான கார தோசை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
l ஐந்து பெரிய கத்தரிக்காய்
l கால் டீஸ்பூன் வெந்தயம்
l இரண்டு டீஸ்பூன் மல்லி
l ஒரு டீஸ்பூன் சீரகம்
l கால் கப் தேங்காய் துருவல்
l பச்சரிசி 200 கிராம்
l 10 காய்ந்த மிளகாய்
l உப்பு, எண்ணெய் தேவையான அளவு
l இரண்டு துண்டு புளி
l ஒரு டீஸ்பூன் வெல்லம்
செய்முறை
பச்சரிசியை பாத்திரத்தில் போட்டு நன்கு அலசி, இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின், மிக்சி ஜாரில் வறுத்த வெந்தயம், மல்லி, சீரகம், தேங்காய் துருவல், ஊற வைத்த பச்சரிசி, உப்பு, காய்ந்த மிளகாய், புளி, வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். பின், இதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, அதனுடன் வேகவைத்த கத்தரிக்காயை நன்கு மசித்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், நாம் கலந்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். சுவையான கத்திரிக்காய் கார தோசை தயார்
- நமது நிருபர் - .

