ADDED : ஆக 02, 2025 02:01 AM

கேழ்வரகு உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் நல்லது என்பது, அனைவருக்கும் தெரியும். இரும்புச்சத்து உட்பட, பலவிதமான புரதச்சத்துகள் உள்ளன. தினமும் வழக்கமான இட்லி சாப்பிட்டு போரடித்தால், கேழ்வரகு இட்லி செய்து சாப்பிடுங்கள். சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.
செய்முறை உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை, நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் நீரில் ஊற விடவும். அதே போன்று கேழ்வரகை கழுவி, தனி பாத்திரத்தில் ஊற வைக்கவும். பின் உளுந்தம் பருப்பை மிக்சியில் போட்டு இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும்.
கேழ்வரகை சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள உளுந்தம் பருப்பு மாவை சேர்த்து, பிசைந்து கொள்ளவும். இதை இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் உப்பு சேர்த்து கலக்கவும். இட்லி தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி, மாவை ஊற்றவும். 15 நிமிடம் வேக வைத்தால், ஆரோக்கியமான கேழ்வரகு இட்லி தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் பொருத்தமாக இருக்கும். கேழ்வரகு சாப்பிடாத சிறார்களும், கேழ்வரகு இட்லியை விரும்பி சாப்பிடுவர். வயதானவர்களுக்கும் நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.
- நமது நிருபர் -