ADDED : ஜூலை 18, 2025 11:13 PM

பொதுவாக மாம்பழத்தை, 'பழங்களின் ராஜா' என, புகழ்வதுண்டு. மாம்பழம் விரும்பாதோர் இல்லை. இதை பயன்படுத்தி பாயாசம், சட்னி, ஊறுகாய், மில்க் ஷேக், இனிப்புகள் என, பல விதமான தின்பண்டங்கள் செய்வர். மாம்பழ அப்பளமும் தயாரிக்கலாம். இது பாரம்பரியமான தின்பண்டங்களில் ஒன்றாகும்.
சீசனுக்காக காத்திருக்காமல், ஆண்டு முழுவதும் மாம்பழம் தின்று மகிழ, மாம்பழ அப்பளம் உதவும். ஆனால் இதை எப்படி செய்வது என, பலருக்கும் தெரிவது இல்லை. எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
செய்முறை
முதலில் மாம்பழங்களை நன்றாக கழுவவும். தோலை அகற்றி உட்புற சதையை எடுத்து மிக்சியில் போட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரை, உப்பு, மிளகாய் துாள், இஞ்சி துாள், ஏலக்காய் துாளை போட்டு, நன்றாக கலக்கவும். கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பை பற்ற வைத்து, அடி கனமான பாத்திரம் அல்லது வாணலி வைக்கவும். தீ மிதமாக இருக்க வேண்டும். வாணலியில் மாம்பழ கலவையை போட்டு, 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும். சர்க்கரை கரைந்து, கலவை ஓரளவு கெட்டியாகும் வரை அவ்வப்போது கலக்குங்கள். இல்லாவிட்டால் கலவை வாணலியில் ஒட்டிக் கொள்ளும். கலவை தயாரானதும் ஆற விடுங்கள்.
அதன்பின் சுத்தமான பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலையை எடுத்துக் கொண்டு, அதன் மீது எண்ணெய் தடவுங்கள். இதில் மாம்பழ கலவையை ஊற்றி, சமமாக பரப்பவும்.
இதை இரண்டு, மூன்று நாட்கள் வெயிலில் உலர்த்தவும். அதன்பின் பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து பிரித்து, சிறு, சிறு துண்டுகளாக்கி காற்று புகாத டப்பாவில் போட்டு வையுங்கள். தேவையான போது எண்ணெயில் பொறித்து சாப்பிடுங்கள்.
மாம்பழ அப்பளம் இனிப்பு, புளிப்பு, காரச்சுவை கலந்திருக்கும். ஒரு துண்டு தின்றால், மேலும் சாப்பிட வேண்டும் என தோன்றும். இந்த அப்பளம் ஓராண்டு வரை கெடாமல் இருக்கும்
- நமது நிருபர் -.

