ADDED : ஜன 31, 2026 05:06 AM

- நமது நிருபர் -
இரவு உணவுக்கு வடித்த சாதம் மிச்சமாகி விட்டால், மறுநாள் காலை எலுமிச்சை சாதம், புளியோதரை போன்ற சிற்றுண்டி தயாரிப்பது வழக்கம். மிச்சமான சாதத்தில் சுவையான இன்ஸ்டென்ட் புலாவ் செய்யலாம். இதை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்:
தேவையான பொருட்கள்
l கொத்தமல்லி - 1 கப்
l புதினா - 1 கப்
l பச்சை மிகளாய் - 3
l பூண்டு - 2 பற்கள்
l இஞ்சி - சிறிய துண்டு
l எண்ணெய் - 3 ஸ்பூன்
l நெய் - 1 ஸ்பூன்
l முந்திரிப்பருப்பு - 10
l பட்டை - சிறு துண்டு
l லவங்கம் - 6
l பிரிஞ்சி இலை - 1
l ஏலக்காய் - 4
l சீரகம் - 1 ஸ்பூன்
l வெங்காயம் - 1
l கேரட் - 1
l குடமிளகாய் - 1
l பட்டாணி - அரை கப்
l பீன்ஸ் - 10
l சாதம் - 4 கப்
l உப்பு - தேவையான அளவு
l கரம் மசாலா - அரை ஸ்பூன்
l எலுமிச்சை ரசம் - 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் போன்று, பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் ஊற்றவும். சூடானதும் முந்திரிப்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய், சீரகம், நறுக்கிய வெங்காயம் போட்டு, நறுமணம் வரும் வரை வதக்கவும்.
அதன்பின் நறுக்கிய கேரட், குடமிளகாய், பட்டாணி, பீன்ஸ், உப்பு சேர்த்து கலக்கவும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கொத்துமல்லி, புதினா பேஸ்டை போடவும்.
பச்சை வாசம் போகும் வரை, இரண்டு நிமிடம் வதக்கவும். அதன்பின் சாதம், கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும். வாணலியை மூடி ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
அதன்பின் முந்திரிப்பருப்பு, எலுமிச்சை ரசத்தை சேர்த்தால், இன்ஸ்டன்ட் புலாவ் தயார். வெங்காயம், வெள்ளரிக்காய் பச்சடியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

