ADDED : ஏப் 12, 2025 02:46 AM

கர்நாடகாவின் கடலோர பகுதியில் துளு மொழி பேசும் சமுதாயத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள், பண்டைய காலத்தில் போர் வீரர்களாகவும், நில பிரபுக்களாகவும், விவசாயிகளாகவும் வாழ்ந்தவர்கள். இன்று பெரும்பாலானோர், நகரவாசிகளாக மாறி விட்டனர்.
ஆனால் அவர்களின் உணவில் மட்டும் இன்னமும் அதே ருசி தொடர்கிறது. இச்சமுதாயத்தின், 'கோரி கஸ்சி' என்ற அசைவ குழம்பு, திருமண வீடுகளில் பரிமாறப்படும்.
செய்முறை
மிக்சியில் பூண்டை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போன்று அரைக்கவும். அரைத்த பேஸ்டில், பாதியில் மஞ்சள் துாள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, கோழியுடன் சேர்க்கவும். நன்கு கலந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியை மிதமான தீயில் சூடாக்கி, உலர்ந்த தேங்காயை சேர்த்து, வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். பின், அதனை பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய்யை சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, குறைந்த சூட்டில், அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை, 8 முதல் 10 நிமிடம் வதக்கவும்.
மிளகாய், மிளகு, கொத்தமல்லி, சீரகம், வெந்தயம் ஆகியவைகளை வாணலியில் கலந்து, 9 முதல் 10 நிமிடம் குறைந்த சூட்டில் வறுக்கவும். அப்போது அவைகளின் நறுமணம், சுவையை சேர்க்கும். பின், இந்த மசாலாவை ஆரவிட வேண்டும். புளி விழுது, தேங்காய் பாலுடன் ஒரு மிக்சியில் ( பிளெண்டர்) போட்டு, பேஸ்ட் போன்று அரைக்கவும். பேஸ்ட் கெட்டியாகவும், சிவப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
பெரிய பாத்திரத்தில் எண்ணெய்யை மிதமான தீயில் சூடாக்குங்கள். கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 7 முதல் 8 நிமிடம் கிளற வேண்டும். அடுப்பை அணைத்து விட்டு, பூண்டு விழுதை சேர்த்து, 20 முதல் 30 விநாடிகள் வதக்கவும். வாணலியில் பூண்டு ஒட்டிக் கொண்டால், 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும்.
வாணலியை மிதமான சூட்டில் வைத்து, கோழியை சேர்க்கவும். துண்டுகள் இறுக்கமாகும் வரை, 6 முதல் 7 நிமிடம் வதக்கவும். பேஸ்டை சேர்த்து நன்கு கிளறவும். அனைத்து துண்டுகளிலும் பேஸ்ட் ஒட்டும் வகையில் இரண்டு நிமிடம் வதக்கவும்.
தண்ணீர் சேர்த்து தாளிக்கவும். ஒரு கொதி நிலை வந்ததும், வாணலியை மூடியால் மூடிவிடுங்கள். குறைந்த வெப்பத்தில் 30 நிமிடம் கொதிக்க விடுங்கள். இறுதியாக இலவங்கப்படை, கிராம்பு துாளை, எலுமிச்சை சாறுடன் சேர்க்கவும். சாதம், தோசையுடன் 'கோரி கஸ்சி' குழம்பை சேர்த்து கொள்ளலாம். ஞாயிற்று கிழமை நம் வீட்டில் இதை செய்து பார்க்கலாம்.
- நமது நிருபர் -