ADDED : ஏப் 12, 2025 02:42 AM

பொதுவாக விசேஷ நாட்களில் இறைச்சி சாப்பிடுவதற்கு பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் அனுமதிப்பது இல்லை. இதனால் இறைச்சி பிரியர்கள், மீல்மேக்கர் வாங்கி அதில் பிரியாணி செய்து சாப்பிடுவர். இறைச்சி அளவுக்கு இல்லாமல் இருந்தாலும், இறைச்சிக்கு நிகராக சாப்பிட்டது போன்ற திருப்தி கிடைக்கும்.
மீல்மேக்கரில் பிரியாணி மட்டுமின்றி, பொரியல் கூட செய்யலாம். ஆனால் அதில் சூப்பரான கிரேவியும் செய்யலாம். அதுவும் அசைவ சுவையில். வீட்டிற்கு வரும் திடீர் விருந்தாளிகளுக்கு விரைவில் செய்து கொடுக்க கூடிய டிஷ் ஆகவும் மீல்மேக்கர் கிரேவி உள்ளது.
செய்முறை
அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதில் மீல்மேக்கரை போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பை ஆப் செய்து கொள்ளுங்கள்.
சூடு ஆறியதும் மீல்மேக்கரை எடுத்து சிறிதாக வெட்டி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும். பொடியாக நறுக்கி வைத்திருந்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவைப்படும் அளவு உப்பு, மிளகாய், சோம்பு, சீரக, மஞ்சள் துாள் சேர்த்து நன்றாக வதக்கியதும், நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதனுடன் சேர்ந்து நன்கு கிளறவும். நறுக்கி வைத்திருக்கும் மீல்மேக்கரை சேர்த்து கிளறி, ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சூடான, அசைவ சுவை மீல்மேக்கர் ரெடி. சாதத்திற்கு மட்டுமின்றி தோசை, சப்பாத்தி, பரோட்டா, பூரிக்கும் சேர்த்து சாப்பிடலாம். சூப்பரான காம்பினேஷனாக இருக்கும்
- நமது நிருபர் -.

