ADDED : ஜூன் 06, 2025 11:36 PM

தினை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தை குறைக்கவும் செய்கிறது. கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்கிறது.
இதுபோல பனம்பழத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. வைட்டமின் 'ஏ' சொத்து அதிகம் இருப்பதால் பார்வை திறனும் மேம்படுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
தினை, பனம் பழம் காம்பினேஷனில் சூப்பரான கேசரி செய்யலாம்.
அடுப்பை 'ஆன்' செய்து அதில் வாணலியை வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை நன்கு வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின், ஒரு கப் தினையை நெய்யில் போட்டு நன்கு வறுக்கவும். தினை பொன்னிறமாக மாறியதும் தனி தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பனம்பழம் கூழை எடுத்து, வாணலியில் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளற வேண்டும். பச்சை வாசனை போனதும் வறுத்து வைத்திருக்கும் தினையை போட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். கேசரி பதத்திற்கு வந்தபின் அடுப்பை ஆப் செய்து விடலாம். அதன் மீது ஒரு தட்டு வைத்து முடிவிடலாம்.
பத்து நிமிடம் கழித்து தட்டை அகற்றி கேசரியை சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
--- நமது நிருபர் - -