ADDED : டிச 13, 2025 06:47 AM

அசைவ பிரியர்களுக்கு, மீன், கோழி என்றால் நாக்கில் எச்சில் ஊறும். அதே போன்று சைவ உணவு பிரியர்களுக்கு வாழைக்காய் என்றால், மிகவும் பிடிக்கும். வாழைக்காயில் பஜ்ஜி, வறுவல், பொரியல் உட்பட, பல விதமான உணவுகளை செய்வர். 'வாழைக்காய் கோலா' சாப்பிட்டுள்ளீர்களா. ஒரு முறை செய்து சாப்பிடுங்கள். நாவில் சுவை ஒட்டிக்கொள்ளும்.
தேவையான பொருட்கள்
l வாழைக்காய் - 2
l வெங்காயம் - ஒன்று
l பூண்டு - 8
l இஞ்சி - சிறிய துண்டு
l பச்சை மிளகாய் - 3
l காய்ந்த மிளகாய் - 3
l கறிவேப்பிலை - 2 கொத்து
l சோம்பு - ஒன்றரை ஸ்பூன்
l தேங்காய் துருவல் - ஒரு கப்
l பொட்டுக்கடலை - ஒரு கப்
l உப்பு - தேவையான அளவு
l மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்
l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
l எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைக்காய்களின் தோல்கள் மற்றும் காம்புகளை நீக்கிவிட்டு, குக்கரில் போட்டு, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து வாழைக்காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நான்கு விசில் வந்த பின் அடுப்பை நிறுத்தவும். சூடு அடங்கியதும், குக்கரில் இருந்து வாழைக்காயை எடுத்து ஆறவிடவும்.
அகலமான பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு, மசித்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
காய்ந்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, சோம்பு, சுவைக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் வதங்கியதும், நறுக்கிய கொத்துமல்லி தழையை போடவும்.
இதை மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல், விழுதாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதுடன் ஏற்கனவே மசித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து, பிசைய வேண்டும். இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கோலா உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து, டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும். பெரியவர்கள் முதல், சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்
- நமது நிருபர் - .

