ADDED : மே 02, 2025 11:25 PM

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்வோர் மதிய வேளையில் டிபன் பாக்சை திறந்து பார்த்தால் பெரும்பாலும் சாம்பார், தயிர், ரசம் சாதம் போன்றவையே உணவாக இருக்கும். இதையே சாப்பிட்டு அவர்களுக்கு போர் அடித்திருக்கும். அதனால், வாரத்தில் ஒரு நாளாவது காளான் சாதம் செய்து தரலாம். இதை செய்வது மிக எளிது. சுவையோ அரிது.
செய்முறை
பாஸ்மதி அரிசியை வேகவைத்து வடித்து கொள்ள வேண்டும். இதன்பின், காளானை நன்கு கழுவி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்த பிறகு, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். இதில், நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில், மிளாகாய் துாள், மஞ்சள் துாள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின், அடுப்பின் தீயின் அளவை குறைத்து வைத்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இதன் பின், காளானை போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். காளான் வெந்ததும் வடித்து வைத்துள்ள சாதத்தை, நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
நெய், மிளகு துாள், கொத்துமல்லி தழைகளை துாவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவு தான் சுவையான காளான் சாதம் தயார். இதனுடன் ஆனியன் பச்சடி தொட்டு சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.

