ADDED : ஆக 16, 2025 04:56 AM

பூரி, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடுவதற்கு புதிதாக ஏதேனும் சமைக்க விரும்புவோருக்கு, நீலகிரி வெஜ் குருமா சரியான சாய்சாக இருக்கும். ஒரு முறை வீட்டில் சாப்பிட்டால், அடுத்த முறை வேறு எதையும் சாப்பிடத் தோன்றாது.
செய்முறை முதலில் ஒரு கொத்து கொத்தமல்லி, அதைவிட கொஞ்சம் கம்மியாக புதினா, அரை கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, ஐந்து முந்திரி, நான்கு பச்சை மிளகாய் எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும்.
வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இரண்டு ஏலக்காய், ஒரு பட்டை, பிரியாணி இலை, நான்கு கிராம்பு, இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கிப் போடவும்.
வெங்காயம் வதங்க கொஞ்சம் உப்பு சேருங்கள். அடுத்ததாக ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட் போடவும்.
பச்சை வாசனை போன பிறகு காலி பிளவர், பச்சை பட்டாணி, ஒரு கேரட் நறுக்கியது, ஒரு உருளைக்கிழங்கை நான்காக வெட்டி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேகவிடுங்கள். இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் துாள் சேர்க்கலாம்.
அடுத்ததாக மிக்ஸியில் அரைத்த பேஸ்ட், ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்துவிட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு மூடி எட்டு முதல் - பத்து நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்கவிடுங்கள்.
பூரி, சப்பாத்தி உடன் - நீலகிரி வெஜ் குருமா அட்டகாசமான காம்போவாக இருக்கும்.
- நமது நிருபர் -