ADDED : நவ 22, 2025 04:58 AM

தினமும் வீட்டில் சாம்பார் சாதம், ரசம் சாதம், மோர் சாதம் சாப்பிட்டு 'போர்' அடித்து விட்டதா? குழந்தைகளுக்கும் ஏதாவது புதிதாக செய்து கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படி என்றால் சற்று மாறுதலாக பலாக்காய் பிரைடு ரைஸ் வீட்டிலேயே செய்யலாமே?
தற்போது பிரியாணிக்கு இணையான உணவாக, பிரைடு ரைஸ் மாறி உள்ளது. தள்ளுவண்டி கடைகள், ஹோட்டல்களில் பிரைடு ரைஸ் அதிகமாக விற்பனை ஆகிறது. ஹோட்டலுக்கு சென்று சாப்பிடாமல், வீட்டிலேயே அசைவ சுவையில் பலாக்காய் பிரைடு ரைஸ் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
l ஒரு கப் பலாக்காய்
l கால் டீஸ்பூன் மஞ்சள் பவுடர்
l உப்பு, எண்ணெய் தேவையான அளவு
l இரண்டு டீஸ்பூன் மைதா மாவு
l இரண்டு டீஸ்பூன் சோள மாவு
l ஒரு டீஸ்பூன் மிளகு பவுடர்
l ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு
l சிறிய துண்டுகளாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்
l இரண்டு டீஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது
l ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸ்
l ஒரு டீஸ்பூன் சோயா சாஸ்
l ஒரு கப் வடித்த பாசுமதி சாதம்
செய்முறை
பலாக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் பவுடர், தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும். பின், வேக வைத்த பலாக்காயுடன் மைதா, சோள மாவு, மிளகு பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அடுப்பை ஆன் செய்து எண்ணெயை ஊற்றி சூடான பின், பலாக்காய் கலவையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் மிளகாய் விழுது, சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகு பவுடர் சேர்த்து நன்கு வதக்கவும். பின், பொரித்த பலாக்காய் கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
பின், சோள மாவை சிறிதளவு தண்ணீரில் நன்கு கரைத்து சேர்த்து, இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி வேகவைத்த சாதத்தை சேர்த்து கலக்கவும். கடைசியாக வெங்காய தாள் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால், சூடான, சுவையான பலாக்காய் பிரைடு ரைஸ் ரெடி
- நமது நிருபர் - .

