ADDED : மே 09, 2025 11:29 PM

கோடை துவங்கியதில் இருந்து திட உணவுகள் சாப்பிட பலருக்கும் பிடிக்காது. இதனால், நீர் ஆகாரமாகவே உட்கொள்வர். இது போன்ற சமயத்தில் சத்துக்குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சத்தான பானங்களை பருகுவது அவசியம்.
இதற்கு ஏற்றாற்போல, சத்தும், சுவையும் இரண்டும் நிறைந்த ராகி மில்க்கை வீட்டிலே செய்து குடிக்கலாம்.
செய்முறை
பாதாம், முந்திரி, பேரிச்சம் பழம், ஏலக்காய் விதைகளான சியா விதைகள் ஆகியவற்றை நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதையடுத்து, சியா விதையை தவிர மற்ற ஊற வைத்த பொருட்களை மிக்சியில் போட்டு துாளாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதன்பின், பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்சியில் போட்டு அரைத்து, அதன் சாற்றை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
இந்த பீட்ரூட் சாறை கேழ்வரகு மாவுடன் சேர்த்து, நன்றாக கலக்கவும். அப்போது மாவில் கட்டிகள் ஏதும் வரக்கூடாது. இதன்பின், இந்த கலவையை அடுப்பில் வைத்து, பத்து நிமிடங்கள் நன்றாக கிளறி, பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவை ஆறிய பின், அதனுடன் ஏற்கனவே அரைத்த பொடி, முந்திரி, பால், நாட்டுச்சர்க்கரை அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அவ்வளவு தான் சுவையான ராகி மில்க் தயார்.
இதில், ஊற வைத்த சியா விதைகளை போட்டு கண்ணாடி குடுவையில் ஊற்றி பரிமாறலாம். இதை, வீட்டில் உள்ள குட்டீஸ்கள் விரும்பி குடிப்பர். அதே சமயம், கோடையில் திட உணவுகளை சாப்பிட பிடிக்காதவர்களும் விரும்பி குடிப்பர்.
இது சுவையும், சத்தும் சேர்ந்த ஒரே பானம். அதுமட்டுமின்றி, இதை கடைகளில் சென்று வாங்கிக் குடிக்கவும் இயலாது
- நமது நிருபர் -.