ADDED : ஆக 30, 2025 03:37 AM

பொதுவாக பெண்கள், எந்த பண்டிகை, விரத நாட்கள், குழந்தைகளின் பிறந்த நாள் என்றால், சேமியா பாயசம் அல்லது ரவை கேசரி செய்வது வழக்கம். இதற்கு பதிலாக அரிசி மாவு இனிப்பு உருண்டை செய்யலாமே.
செய்முறை முதலில் அடுப்பை பற்ற வைத்து, பாத்திரத்தை வைக்கவும். அதில் அரிசி மாவை போட்டு, மிதமான தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் வறுத்து, தட்டில் வைத்துக் கொள்ளவும். அதன்பின் அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் மஞ்சள் துாள் சேர்க்கவும். பால் முழுதுமாக மஞ்சள் நிறமாக மாறிய பின், கொப்பரை துருவல், ஏலக்காய் துாள் சேர்த்து, நன்றாக கலக்கவும். இதில் பொடித்த முந்திரி பருப்பை சிறிது, சிறிதாக சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கிளறவும்.
இந்த கலவையில், வறுத்து வைத்துள்ள அரிசி மாவை சிறிது, சிறிதாக போட்டு கை விடாமல் கிளற வேண்டும். அதில் நெய் சேர்க்கவும். கலவை நன்றாக வெந்து, பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது, பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.
ஆறியதும் மாவை சிறு, சிறு உருண்டைகள் பிடிக்கவும். ஒரு தட்டில் சிறிதளவு கொப்பரை துருவலை வைத்து கொள்ளவும். மாவு உருண்டைகளை கொப்பரை தேங்காய் துறுவலில் பிரட்டி, அகலமான தட்டில் வைக்கவும். அனைத்து உருண்டைகளையும் இது போன்று செய்த பின், பொடித்த பாதாம், பிஸ்தாவை துாவி அலங்கரிக்கவும். இனிப்பு உருண்டை உலர்ந்த பின், காற்று புகாத டப்பாவில் வைக்கலாம்.
அரிசி மாவை அளவிட பயன்படுத்திய அதே கப்பை பால் உட்பட மற்ற பொருட்களை அளவிட பயன்படுத்த வேண்டும். இனிப்பு அதிகம் வேண்டுமானால், கூடுதலாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சுவையும் புதுமையாக இருக்கும்.
- நமது நிருபர் -

