ADDED : ஆக 22, 2025 11:18 PM

பேச்சுலர்ஸ்க்கு தினமும் இட்லி, தோசைக்கு தக்காளி, தேங்காய் சட்னி சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். இதற்காக, அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. சுலபமாக பூண்டு சட்னி செய்யலாம். செய்யும் நேரமோ குறைவு, சுவையோ அதிகம்.
செய்முறை முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பின், தோல் நீக்கிய பூண்டு பற்களை போட வேண்டும். இதை லேசாக வதக்கவும். பத்து சின்ன வெங்காயங்களை சேர்த்து வதக்கவும்.
புளி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர், வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும். அதை மிக்சியில் போட்டு உப்பு, தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். சட்னி பதத்திற்கு வர வேண்டும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சீரகம், கறிவேப்பிலை, அரைத்து வைத்த சட்னி ஊற்றி இரண்டு நிமிடத்திற்கு வதக்கவும். வதக்கிய பின் சட்னியின் நிறம் லேசாக மாறும். அப்போது, அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு சட்னி தயார்.
இந்த சட்னியை நான்கு நாட்கள் வைத்து கூட சாப்பிடலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
-நமது நிருபர் -

