ADDED : ஜூலை 12, 2025 05:14 AM

காரம், மல்லி, புதினா, தேங்காய் என துவையலில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துவையல் பிடிக்கும். மதிய உணவு சாப்பிடும் போது, தாங்கள் விரும்பும் துவையல் இருந்தால் வழக்கத்தை விட கூடுதலாக கூட சாப்பிடுவர்.
கத்திரிக்காயை வைத்தும் சூப்பரான துவையல் செய்யலாம். வீடுகளில் கத்திரிக்காயில் புளிக்குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய், பச்சடி அதிகம் செய்வர். துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை
அடுப்பை ஆன் செய்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின், புளி, உப்பு சேர்த்து நன்கு கிளறி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும். கத்திரிக்காய் வதங்கியதும் கொத்தமல்லி இலைகளை துாவி விடவும். பின், அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம், பெருங்காய துாள் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து விட்டால் சுவையான கத்திரிக்காய் துவையல் தயார்.
காலையில் குழந்தைகள் அவசரமாக பள்ளிக்கு கிளம்பும் போது, மதிய உணவிற்கு குழம்பு வைக்காவிட்டால் சாதத்தில், துவையலை கிளறி கொடுத்து விடலாம்.
கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட ஒரு முறை இந்த துவையலை சாப்பிட்டு பார்த்தால், அதன்பின் தொடர்ந்து விரும்பி சாப்பிடுவர்.
- நமது நிருபர் -