ADDED : ஆக 02, 2025 02:00 AM

முக்கிய உணவான அடையில், புரத சத்து அதிகம் கிடைப்பதுடன், கொழுப்பை குறைத்து எடை குறைப்புக்கும் உதவுகிறது. ஆரோக்கியமான காலை உணவாகவும் அமைகிறது. அடையில் கார பருப்பு, நவ தானிய, முருங்கை கீரை, வெங்காயம், வாழை பூ, கேழ்வரகு பல வகைகள் உள்ளன. இதில் தமிழகத்தின் தஞ்சாவூர் ஸ்பெஷலான 'தவல அடை' எப்படி செய்வது பார்ப்போம்.
செய்முறை மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், மிளகு, உப்பு சேர்த்து கொர கொரப்பாக பொடி செய்து கொள்ளவும். பின், சீரகம், அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து, ரவை போல அரைத்து எடுக்கவும்.
அரைத்து எடுத்த விழுதுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, கரண்டியை எடுத்து மாவு பதத்திற்கு நன்கு கலக்கி, அரை மணி நேரம் மாவை ஊற வைக்க வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து, பாத்திரத்தில் வைத்திருக்கும் மாவு மீது ஊற்றி, தேங்காயை துருவலை சேர்த்து நன்கு கலக்கவும்.
வழக்கமான மாவை விட கெட்டியாக இருக்கும் பதத்திற்கு தயார் செய்ய வேண்டும்.
வாணலியை அடுப்பில் 'சிம்' மில் வைத்து, தோசை மாவு ஊற்றுவது போல அடை மாவை ஊற்ற வேண்டும். அதன் பின் அதை சுற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும்.
மொறுமொறுப்பாக வந்த பின், வாணலியில் இருந்து எடுத்து, அடை மீது இட்லி மிளகாய் பொடி துாவி சாப்பிட்டால் சூப்பரான டேஸ்டாக இருக்கும். சட்னி, சாம்பாருடன் வைத்து கூட அடையை சாப்பிடலாம்
- நமது நிருபர் - .