UPDATED : நவ 07, 2026 02:33 AM
ADDED : நவ 06, 2026 07:24 PM

- நமது நிருபர் -
தமிழகத்தில் மதுரை - திருநெல்வேலி வழித்தடத்தில், ரயிலில் செல்லும் பயணியர் கடம்பூர் போளியை சாப்பிட்டு பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அதுபோல, கர்நாடகாவின் பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் ரயிலில் செல்லும் பயணியருக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியாக மத்துார் வடை உள்ளது.
சூடான மத்துார் வடை, அதன் மணம், மத்துார் வடை என்ற பெயர் கேட்டாலே, நாவில் எச்சில் ஊறும்.
இந்த பிரபலமான சிற்றுண்டி ஏதோ பெரிய ஹோட்டலின் சமையல் அறையில் இருந்து பிறக்கவில்லை.
மாறாக அது சிறிய உணவகத்தில் இருந்து தான் பிறந்துள்ளது. அதன் வரலாறு பற்றி பார்ப்போம்.
கடந்த 1917ம் ஆண்டில் மாண்டியாவின் மத்துார் ரயில் நிலையத்தில் ராமசந்திர புத்யா என்பவர் சைவ சிற்றுண்டி என்ற பெயரில் உணவகம் நடத்தினார். பெங்களூரு - மைசூரு செல்லும் ரயில் பயணியருக்கு இட்லி, வடை, பக்கோடா விற்பனை செய்தார்.
ஒரு நாள் ரயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே வந்து விடும் என்று அவருக்கு தகவல் கிடைத்தது.
பயணியருக்கு விற்பனை செய்ய பக்கோடா தயாராகவில்லை. என்ன செய்வது என்று யோசித்தார். சாதாரண பக்கோடா போல உருண்டை செய்வதற்கு பதிலாக, பக்கோடா கலவையை தட்டையாக்கி எண்ணெயில் பொரித்தார். குறுகிய நேரத்தில் அந்த சிற்றுண்டி உருவானது.
அதை விற்பனை செய்தார். வடை போன்று வந்ததால், அதற்கு மத்துார் வடை என்று பெயர் சூட்டினார். நாளடைவில் மத்துார் வடைக்கு மவுசு அதிகரித்தது.
ராமசந்திர புத்யாவுக்கு பின், எச்.டி.ஹெப்பார் என்பவரின் குடும்பத்தினர், மத்துார் வடையை தயாரித்து விற்று அதன் பாரம்பரியத்தை தொடர்ந்தனர். மைசூரு மன்னர் குடும்பத்தினரும் மத்துார் வடையை விரும்பி சாப்பிட்டனர்.
இப்போதும், மத்துார் வடை கிடைக்கிறது. அவசரத்திற்காக தயாரிக்கப்பட்ட மத்துார் வடை, இன்று தனக்கென தனி இடம் பிடித்துள்ளது.
