ADDED : ஏப் 05, 2025 01:17 AM

குட்டீஸ்களுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் உருளைக்கிழங்கு மிகவும் பிடித்தமானது. உருளைக்கிழங்கு சிப்ஸ், கட்லெட், ப்ரை என, பல்வேறு சிற்றுண்டிகளை ருசித்திருப்பீர்கள். ஆலு பட்டன்ஸ் சுவைத்துள்ளீர்களா. இல்லையென்றால் உள்ள ரெசிபியை பாருங்கள்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 2 ஸ்பூன்
ரவை -1 கப்
மிளகாய் துாள் -2 ஸ்பூன்
மிளகு துாள் -1 ஸ்பூன்
கருப்பு எள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1 ஸ்பூன்.
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை கழுவி, வேக வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளுங்கள். அடுப்பில் வாணலி வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகம், ரவையை போட்டு லேசாக வறுக்கவும். அதன்பின் அதில் இரண்டு கப் தண்ணீர், சுவைக்கு தேவையான உப்பு சேர்த்து, நன்றாக கொதிக்க வைக்கவும்.
இந்த கலவை உப்புமா பதத்துக்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். ஏற்கனவே வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை, ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்து கொள்ளவும். இதில் ரவை கலவையை போடவும். அதன்பின் மிளகாய் துாள், மிளகு துாள், கரம் மசாலா சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் பிசைந்து கொள்ளவும்.
அதன்பின் இதனை சிறு, சிறு உருண்டைகளாக்கி, கட்டை விரலை வைத்து லேசாக அழுத்தவும். உருண்டைகள் மீது கருப்பு எள்ளை துாவவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை போட்டு, பொன்னிறமாக வறுத்தால், சுவையான ஆலு பட்டன்ஸ் தயார். தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
- நமது நிருபர் -

