ADDED : ஆக 15, 2026 01:00 AM

- நமது நிருபர் -
பலாப்பழத்தில் உள்ள விதைகளை குப்பையில் வீசுவதற்கு பதிலாக, சுவையான பக்கோடா செய்து சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பலா விதை - 12 பீஸ்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் துாள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயத்துாள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பலா விதைகளை நன்கு வேக வைத்து, அவற்றின் தோல்களை நீக்கி, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விதைகளை மிக்சியில் போட்டு, விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த பலா விதை விழுது, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கொத்தமல்லி, மஞ்சள் துாள், மிளகாய் துாள், பெருங்காயத்துாள் சேர்க்கவும்.
இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும். பக்கோடா போடும் பதத்திற்கு மாவுக்கலவை வரும் வரை பிசையவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் கொதித்த பின், சிறிது, சிறிதாக மாவு கலவையை போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் பக்கோடா தயார். இதை, டீ குடிக்கும் போது சாப்பிட்டால் அருமையாக இருக்கும்!
