/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மனிதன் விலங்குகள் மோதலை தடுக்க 'ஆட்டோமேட்டிக் லைட்'
/
மனிதன் விலங்குகள் மோதலை தடுக்க 'ஆட்டோமேட்டிக் லைட்'
மனிதன் விலங்குகள் மோதலை தடுக்க 'ஆட்டோமேட்டிக் லைட்'
மனிதன் விலங்குகள் மோதலை தடுக்க 'ஆட்டோமேட்டிக் லைட்'
ADDED : மார் 09, 2025 08:46 AM

கர்நாடகாவின் மலைநாடு பகுதிகளான சிக்கமகளூரு, ஹாசன், குடகு, ஷிவமொக்கா ஆகிய மாவட்டங்களில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் காட்டு யானைகள், மனிதர்களை தாக்கி கொல்வதுடன், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
பல ஆண்டுகளாக நடக்கிறது. தற்போது பெங்களூரு ரூரல், ராம்நகர், துமகூரு, கோலாரிலும் காட்டு யானைகள் தொல்லை துவங்கி உள்ளது.
பெங்களூரு மத்திகெரே தேவசந்திரா லே - அவுட்டில் உள்ள கடிதான் என்ற ஸ்டார்ட் அப் நிறுவன இயக்குநர் அயன். இன்ஜினியரான இவர், வனவிலங்குகளை விரட்ட கருவியை கண்டுபிடித்து உள்ளார்.
இதுகுறித்து அயன் கூறுவதை பார்ப்போமா?
இந்தியாவில் மனிதன் - விலங்குகள் இடையிலான மோதலில் கடந்த 2018 முதல் 2020 வரையில், 1,401 மனிதர்கள் கொல்லப்பட்டனர். 301 யானைகள் இறந்து உள்ளன. மனிதன் - விலங்குகள் மோதல் பல ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு பிரச்னை.
வனப்பகுதி ஆக்கிரமிப்பால் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதவிக்கும் வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விடுகின்றன.
நான் ஒரு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்த போது, எனது நண்பர் ஒருவர் மனிதன் - வனவிலங்குகள் மோதல் குறித்து என்னிடம் எடுத்து கூறினார். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இதையடுத்து, 'கடிதான்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கினேன். எனது குழுவினருடன் கர்நாடகா, மஹாராஷ்டிரா, உத்தரகண்ட், கேரளா, தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினோம். வனவிலங்குகள் தாக்கம் குறித்து தெரிந்து கொண்டோம்
சூரிய சக்தி
வனவிலங்குகள் ஊருக்குள் வரும் போது, அவற்றுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் விரட்ட புதுமை கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இதையடுத்து சூரிய சக்தியில் இயங்கும் 'ஆட்டோமேட்டிக் லைட்' ஒன்றை தயாரித்தோம். இந்த லைட்டை விவசாய நிலங்களில் பொறுத்தி, சோதனை நடத்தினோம். இந்த லைட் பயன்படுத்த மின்சாரம் செலவு ஆகாது. சூரிய சக்தியில் இயங்க கூடியது. இரவு முழுதும் வெவ்வேறு வண்ண விளக்குகள் இந்த லைட்டில் எரியும்.
வனப்பகுதியில் இருந்து யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வரும் போது, இந்த லைட்டில் இருந்து ஒரு பிம்பம் தோன்றும். அது வனவிலங்கு போன்று இருக்கும்.
இதனால் வனவிலங்குகள் திரும்பி சென்று விடுகின்றன. இதன் மூலம் மனிதன் - விலங்குகள் இடையிலான மோதல் தடுக்கப்படுகிறது.
வனவிலங்குகள், தங்கள் விளைநிலத்திற்கு வருவதை தடுக்க, விவசாயிகள் மின்வேலி அமைக்கின்றனர். இது விலங்குகளுக்கு மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் ஆபத்து தான்.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர்-