/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
புலம் பெயர்ந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தும் இன்ஜினியர்கள்
/
புலம் பெயர்ந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தும் இன்ஜினியர்கள்
புலம் பெயர்ந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தும் இன்ஜினியர்கள்
புலம் பெயர்ந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தும் இன்ஜினியர்கள்
UPDATED : மார் 03, 2025 10:36 AM
ADDED : மார் 02, 2025 06:24 AM

பிழைப்பு தேடி பெங்களூரு வரும் பெற்றோரின் குழந்தைகளின் கல்வி, கலை திறனை மேம்படுத்த, 'பிரவுட் இந்தியன்' தொண்டு நிறுவனத்தை நிறுவிய இரு இன்ஜினியர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
உலகளவில் பெயர் பெற்ற பெங்களூருக்கு, வேலை தேடி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் மக்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பெற்றோரில் சிலர், தங்கள் குழந்தைகளுடன் சாலை ஓரங்களில், காலி இடங்களில் தற்காலிக குடிசை அமைத்து தங்குகின்றனர்.
தங்கள் குழந்தைகள் இரவு பசியுடன் துாங்க கூடாது என்று நினைக்கும் பெற்றோர், கிடைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
அவர்களின் குழந்தைகளின் படிப்பு, அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். இவ்வாறு படிப்பின்றி, தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியாத குழந்தைகளை கை துாக்கிவிடவே, 'பிரவுட் இந்தியன்' தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இதனை செந்தில் குமார், சர்ஜன் ஆகிய இருவரும் சேர்ந்து துவக்கினர்.
மாற்றிய சுனாமி
இணை நிறுவனர் செந்தில் குமார் கூறியதாவது:
தமிழகம் கன்னியாகுமரியை சேர்ந்தவன். 2004ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவில், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. பேரழிவில் தங்கள் குடும்பத்தை இழந்த துக்கத்தை சமாளிக்க முயற்சித்தனர். அதேவேளையில், உணவு, தங்கும் இடம் கிடைக்காமல் மக்கள் போராடுவதை காண முடிந்தது.
பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதில் எங்கள் குடும்பம் ஓரளவு உதவியது. இது என் மனதை மாற்றியது. அப்போதில் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தேன். ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்காக பெங்களூரு வந்தேன்.
2014ல் 'பிரவுட் இந்தியன்' தொண்டு நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான சர்ஜனை சந்தித்தேன். அவரும் என்னை போன்று தொண்டு செய்வதில் ஆர்வமுடன் இருந்தார்.
அப்போது தான் குடிசை பகுதியில், வசிக்கும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன், வெளியூரில் இருந்து வந்து இங்கு வசிப்பது தெரிந்தது.
ராய்ச்சூரை சேர்ந்த பெற்றோர், காலை முதல் மாலை வரை விவசாய வேலை செய்தாலும் தினமும் 200 ரூபாய் ஊதியம் மட்டுமே கிடைத்து வந்தது. இதனால், தங்கள் மூன்று குழந்தைகளுடன் பிழைப்பு தேடி பெங்களூரு வந்தனர்.
பெங்களூரில் ஒரு நாளைக்கு 800 முதல் 1,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இவர்கள் சிறிய தகர கொட்டகையில் வசிக்கின்றனர். குடும்ப தலைவர், ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார்.
படிப்பு
தங்கள் குழந்தைகள் பசியுடன் உறங்க கூடாது என்பதில் தாயும், தந்தையும் கவனமாக இருந்தனரே தவிர, அவர்களின் படிப்பை பற்றி கவலைப்படவில்லை.
இங்கு வருவோர், தங்கள் ஊரில் குழந்தைகள் படித்த பள்ளியில் இருந்து 'டிரான்ஸ்பர் சர்டிபிகேட்' எனும் இடமாற்று சான்றிதழ் வாங்கி வருவதில்லை. இதனால், குழந்தைகளை துவக்க பள்ளியில் சேர்க்க முடிவதில்லை.
இத்தகையோருக்கு உதவி செய்ய நானும், சர்ஜனும் முடிவு செய்தோம். 2019 ல் 'பிரவுட் இந்தியன்' என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினோம். இதன் மூலம், புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு இலவச உணவு, கல்வி அளித்து வருகிறோம்.
எங்களுடன் குப்பாச்சி கற்றல் சமூகம், சமுதாய மாணவர்களுக்கு பள்ளிகளை நடத்தும் சம்ருதி ருவா எனும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, பெங்களூரில் உள்ள புலம் பெயர்ந்த குழந்தைகளுக்காக தினமும் சமூக பள்ளிகளை நடத்தி வருகிறோம்.
இங்கு வயது, கற்றல் திறன் அடிப்படையில் மாணவர்கள் பிரிக்கப்படுகின்றனர். 'எஸ்1' என்றால் ஒரு வாக்கியத்தை படிப்போர்; 'எஸ்2' என்றால் ஒரு வார்த்தையை படிப்போர்'; 'எஸ்3' என்றால் ஒரு எழுத்தை படிப்போர்' என பிரிக்கப்பட்டு உள்ளனர். வார இறுதி நாட்களில், ஆங்கில வகுப்புகள் நடத்துகிறோம்.
மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த நடனம், இசை, ஓவியம் என பல சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறோம். 'கலாரதி' என்ற ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 280 மாணவர்கள் பங்கேற்றனர். பலரும் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த வகையில், அவர்களின் திறமையை வெளி உலகத்திற்கு காட்ட ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில், சிறப்பாக செயல்படுவோர், மற்ற பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுதும்...
இணை நிறுவனர் சர்ஜன் கூறியதாவது:
வறுமை என்பது பணப் பிரச்னை அல்ல. சமூகத்தில் வாய்ப்புகள், வழிகாட்டுதல் இல்லாதது என்று கருதுகிறேன். ஏழைகளின் வளர்ச்சி, சுகாதாரம், பொருளாதார உயர்வு, கல்வி விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு என்ற கண்ணோட்டத்தில் செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பாதிக்கப்பட்டோருக்கு உதவ முயற்சிக்கிறோம். நாடு முழுதும் குடிசைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதே எங்கள் நீண்ட நாள் திட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.