தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ ரூ.5 வீதம் தினமும் 1,500 இட்லி தயாரிக்கும் '70 வயது இளைஞர்'

 ரூ.5 வீதம் தினமும் 1,500 இட்லி தயாரிக்கும் '70 வயது இளைஞர்'

 ரூ.5 வீதம் தினமும் 1,500 இட்லி தயாரிக்கும் '70 வயது இளைஞர்'


ADDED : ஜூலை 25, 2026 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

''ஓர் இட்லி, 5 ரூபாய்க்கு விற்பது வயிற்றை நிரப்பவே தவிர, வாடிக்கையாளர்களின் பணத்தை பறிக்க அல்ல,'' என்கிறார், 50 ஆண்டுகளாக இட்லி விற்கும், 70 வயது முதியவர்.

பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர் ராமசந்திரா, 70. கடந்த, 1972ல், இவரின் தந்தை, இட்லிக்கடை நடத்தி வந்தார். அப்போது ஒரு ரூபாய்க்கு, 10 இட்லி விற்றார். தனது, 16 வயதில் தந்தைக்கு உதவியாக ராமசந்திரா செயல்பட்டார்.

கையால் எப்படி மாவு அரைப்பது; எத்தனை நிமிடம் இட்லியை வேக வைப்பது என ஒவ்வொன்றாக கற்றுக்கொடுத்தார். அன்று முதல், தினமும் அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்து, தொடர்ந்து, 12 மணி நேரம் வேலை செய்கிறார். விறகு அடுப்பில் தினமும், 1,500 இட்லி சமைத்து, விற்கிறார்.

காத்திருப்பு தற்போது, மலை போல விலைவாசி உயர்ந்தபோதும், ஓர் இட்லி 5 ரூபாய்க்கு விற்கிறார். இவரது கடையில் இட்லி வாங்க, அதிகாலை முதலே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், வேலைக்கு செல்வோர் காத்திருக்கின்றனர்.

இது குறித்து ராமசந்திரா கூறியதாவது:

நான் ஒவ்வொரு முறை இட்லி அரைக்கும் போதும், என் தந்தை, என் பின்னால் நின்று கொண்டிருப்பதாக உணர்கிறேன். குறைந்த விலை இட்லி கொடுப்பதாக அனைவரும் கூறுகின்றனர்.

பசியோடு வருவோரின் வயிற்றை நிரப்ப வேண்டுமே தவிர, அவர்களின் பணத்தை காலி செய்ய கூடாது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி கடை நடத்தி வருகிறேன். பெற்றோருடன் சிறு குழந்தைகளாக வந்தவர்கள், இப்போது அவர்கள் வளர்ந்து, தங்கள் பிள்ளைகளுடன் வந்து, என் கடையில் இட்லி வாங்கி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஈடாக எதுவும் இல்லை.

இப்போது என் மகனும், மருமகளும் இட்லி விற்பனை செய்கின்றனர். 70 வயதாகிவிட்டது என்பதால் வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்க விருப்பமில்லை. அவ்வாறு அமர்ந்திருந்தால், எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அதுவே, கடைக்கு வந்தால், புத்துணர்ச்சி கிடைக்கிறது.

நம்பிக்கை ஒரு நாள், இக்கடையில் நான் இருக்கமாட்டேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை விட, இட்லியின் சுவை, பாரம்பரியம், அன்புடன் சமைக்கப்பட்ட உணவுக்கு தலைமுறை தலைமுறையாக மக்களை ஒன்றிணைக்கும் சக்தி உள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us