/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பழமை மாறாத சலுான் தொழிலில் 85 வயது முதியவர்
/
பழமை மாறாத சலுான் தொழிலில் 85 வயது முதியவர்
ADDED : செப் 20, 2025 11:13 PM

நாகரீகமான தொழிலை அநாகரீகம் ஆக்க கூடாது. 'புதுமை' என்ற பெயரில் சமுதாயத்தை இழிவுபடுத்துவதற்கு தனக்கு உடன்பாடில்லை என்கிறார் 'முடி திருத்தும்' ராதாகிருஷ்ணன், 85.
தங்கவயல் சாம்பியன் ரீப் 'எஸ்' பிளாக் பகுதியில் சிறிய தகர கொட்டகையில் முடி திருத்தும் கடை உள்ளது. இக்கடையில் வேலை பார்க்க சென்றவர், 65 ஆண்டுகளாக சொந்தமாக நடத்தி வருகிறார். தங்கவயலின் பல பகுதிகளில் இருந்தும் முடி திருத்தம் செய்து கொள்ள பலரும் வருகின்றனர்.
மெழுகுவர்த்தி 'பானுவாரா' என்ற ஞாயிற்றுக்கிழமை ஓய்வு தினம் என்பதால், கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆரம்ப காலத்தில் மின் வசதி கிடையாது. குடுவை விளக்குகள், மெழுகுவர்த்தி பயன்படுத்தி முடி திருத்தம் செய்து வந்தனர். இவரின் கடை உள்ள பகுதியில், 1962ல் நிகழ்ந்த சில சம்பவங்களால், கடையின் உரிமையாளரான முனியப்பா, தன்னிடம் வேலை செய்து வந்த 18 வயது ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்துச் சென்றார்.
இவர், ஆண்டர்சன்பேட்டை மஸ்கம் பகுதியில் வசிக்கிறார். மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தினமும் காலை 9:00 மணிக்கு கடையை திறந்து, இரவு 7:00 மணி வரை பணி செய்து வருகிறார். 85 வயதான பின்பும் சுயமாக சம்பாதித்து வருகிறார்.
மன நெகிழ்ச்சியுடன் அவர் கூறியதாவது:
இப்பணியை செய்வதன் மூலம், தினமும் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சில நாட்களில் ஒருவர் கூட வராமலும் இருப்பது உண்டு. வீட்டில் சும்மா இருந்தால் சோர்வு ஏற்படும்; உடல் ஆரோக்கியம் கெடும். இங்கு வருவோரிடம் பேசுவதால் நேரம் கழிகிறது. வாடிக்கையாளர்களால் வருமானமும் கிடைக்கிறது. என்னால் முடியும் வரை முடி திருத்தும் பணியை தொடருவேன்.
முடி திருத்தும் தொழில் நாகரீகமானது. ஸ்டெப் கட்டிங், சிசர் கட்டிங், மிஷின் கட்டிங், மொட்டையடித்தல் போன்றவற்றை மட்டுமே மேற்கொள்கிறேன்.
அநாகரீகம் தற்போது முடி திருத்தம் என்ற பெயரில் அநாகரீகத்தை பார்க்க முடிகிறது. இதன் மூலம் ஒரு மனிதனின் ஒழுக்கம் தெரிய வரும். சலுானை நவீனமாக மாற்றலாமே என பலரும் கேட்கின்றனர். இதுவே எனக்கு போதுமானது. நம் கலாச்சாரத்தை விரும்புவோர் இருக்கும் வரை, இப்பணி நிரந்தரமானது. முடி திருத்தும் பணியில் நவீன பெயர்களை காது கொடுத்து கேட்பதில்லை. நவ நாகரீகம் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்வது சரியா.
இவ்வாறு அவர் கேள்வி கேட்கிறார்.
- நமது நிருபர் -