/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
இட்லி, தோசை மட்டுமே சாப்பிடும் கோவில் காளை
/
இட்லி, தோசை மட்டுமே சாப்பிடும் கோவில் காளை
ADDED : ஜன 04, 2026 04:49 AM

பொதுவாக பசுக்கள் மற்றும் காளைகளுக்கு, பசும்புல், பொட்டு, புண்ணாக்கு மிகவும் பிடித்தமான தீவனமாகும். ஆனால், மைசூரில் உள்ள கோவில் காளைக்கு, இட்லி, தோசை, சப்பாத்தி தான், மிகவும் விருப்பமான தீவனமாகும்.
மைசூரு மாவட்டத்தின் கூடனஹள்ளி கிராமத்தில், காளை மாடு ஒன்று கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டுள்ளது. இது, மிகவும் அதிசயமான குணம் உடையது. இந்த காளை, மற்ற மாடுகளை போன்று, தினமும் காலை புல் மேய்வதற்காக நிலத்துக்கோ, தோட்டத்துக்கோ செல்வதில்லை.
கிராமத்தில் மஹதேவ் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் முன் சென்று நிற்கும். அவர் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற சிற்றுண்டிகளை கொடுத்தால், வயிறார சாப்பிட்டு விட்டு அங்கிருந்து செல்லும்.
சிற்றுண்டி கொடுக்காவிட்டால், கோபித்து கொண்டு ஹோட்டலுக்குள் சென்று நின்று கொள்ளும். சிற்றுண்டி கொடுக்கு
ம் வரை அங்கிருந்து நகராது. மீண்டும் பசித்தால், கிராமத்தில் ஏதாவது ஒரு வீட்டு வாசலில் சென்று நிற்கும். வீட்டினர் சிற்றுண்டி தரும் வரை, அங்கிருந்து செல்லாது.
வீட்டினரும் அன்போடு இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றை கொடுப்பர். இதை தவிர வேறு எதையும் சாப்பிடுவது இல்லை. கிராமத்தினரை பொறுத்த வரை, இந்த காளை மாடு செல்லப்பிள்ளையாக உலா வருகிறது.
கிராமத்தினர் கூறியதாவது:
விவசாயி ஒருவர் கூடனஹள்ளி கிராமத்தில் உள்ள லட்சுமி கோவிலுக்கு வேண்டுதல் வைத்திருந்தார். வேண்டுதல் நிறைவேறியதால், நான்கு மாத காளை கன்றுக்குட்டியை, காணிக்கையாக செலுத்தினார்.
இப்போது காளைக்கு நான்கு வயது நிரம்பியுள்ளது. கிராமத்தில் நடக்கும் திருவிழாவின் போது, காளைக்கு சிறப்பு பூஜை செய்து, ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகிறது.
கிராமத்தில், 700 வீடுகள் உள்ளன; 2,000 மக்கள் தொகை. கோவில் காளை தினமும் காலை முதல் இரவு வரை, ஊரை சுற்றி வருவதால் கிராமத்தில் தீய சக்தி, பேய், பிசாசு நுழையாது என்பது, எங்களின் நம்பிக்கை.
இந்த காளை வந்த பின், ஊரில் ஒரு திருட்டும் நடந்தது இல்லை. காளைக்கு வீடுகளில் தயாரிக்கப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி என்றால் மிகவும் விருப்பம். வீடுகளுக்கு சென்று மக்கள் தரும் உணவை சாப்பிடும்.
இரவு ஊரை வலம் வந்த பின், லட்சுமி கோவில் முன்பாகவோ அல்லது மஞ்சு என்பவரின் வீட்டு வாசலிலோ காளை படுத்துறங்கும்.
யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. எங்களின் காவல் தெய்வம் போன்றுள்ளது. கோவில் காளை எங்கள் வீட்டு உறுப்பினரில் ஒருவராக வாழ்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

