/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
துளு கலாசாரத்தை பரப்பும் அசாம் இளைஞர்
/
துளு கலாசாரத்தை பரப்பும் அசாம் இளைஞர்
ADDED : அக் 25, 2025 10:59 PM

வாய் உள்ள பிள்ளை, பிழைத்துக்கொள்வான் என்ற பழமொழி, தமிழில் உண்டு. இந்த பழமொழிக்கு எடுத்துக்காட்டாக ஒரு நபர் உள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெஹருல், 26. இவர், ரயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிய, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அசாமிலிருந்து மங்களூரு வந்தார். அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள், துளு மொழியிலேயே உரையாடினர். இதை பார்த்த ஜெஹருலுக்கும் துளு பேசும் ஆசை வந்தது. இதற்கு துளு மொழியின் ஓசையும் முக்கிய காரணம். இம்மொழியில் பேசும் வார்த்தைகள் வீணை வாசிப்பது போல சத்தம் எழுப்பக்கூடியவை, இதன் இசையில் அவர் மயங்கிவிட்டார்.
மொழி மீது காதல் இதையடுத்து, மற்றவர்களுடன் பேசுவதன் மூலம் துளு மொழியை கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கினார். வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, அங்கு பேசும் மொழி, கலாசாரத்தை கற்றுக் கொள்வது மிக நல்லது. அப்போது, தான் அங்கிருப்பவர்களிடம் நன்கு பழக முடியும். இதை மனதில் வைத்துக் கொண்ட ஜெஹருலும் துளு மொழி பேசுவதில் தீவிரம் காட்டினார். படிப்படியாக துளு மொழியை கற்றுக்கொண்டார். இதனிடையே துளு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையான காந்தாரா படத்தை பார்த்து, பிரமித்தார்.
யு டியூப், முகநுால், இன்ஸ்டாகிராமில் துளு மொழியில் பேசி வீடியோ வெளியிடுவதை ஜெஹருல் வாடிக்கையாக வைத்துக் கொண்டார். இதை பார்த்த பலரும் அசந்தனர். ஒரு அசாம் இளைஞர், சரளமாக துளு மொழி பேசுவதை பார்த்து மிரண்டனர். குறுகிய நாட்களிலே இவர் பிரபலமானார்.
சகலகலா வல்லவன் தன் பெயரை மற்றவர்கள் கூப்பிடுவதற்கு சிரமப்படுவதை உணர்ந்ததால், 'ஜேம்ஸ்' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இவரது ஒவ்வொரு வீடியோக்களிலும் துளு கலாசாரத்தை எடுத்து கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். ரயில்வேயில் வேலை செய்த பின் மற்ற நேரங்களில் உணவு டெலிவரியும் செய்து வருகிறார். மீதமுள்ள நேரத்தில் வீடியோ வெளியிடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
என்னுடன் பணிபுரியும் நண்பர்களுக்கு ஹிந்தி தெரியாது. அவர்கள் துளு மட்டுமே பேசுவர். இதனால், நான் துளு மொழியை விரும்பி கற்றுக்கொண்டேன். அந்த மொழியின் வரலாற்றை அறிந்து கொண்டேன்.
துளு கற்பது மிக எளிதானது. இதனால், உள்ளூர் மக்களுடன் பேசி பழகக்கூடிய சூழல் உருவானது. அனைவரும் என் வீடியோக்கள் பார்த்து பாராட்டுகின்றனர். அசாமில் உள்ள என் நண்பர்கள், உறவினர்கள் கூட துளு மொழியை சரளமாக பேசுவது பற்றி அடிக்கடி கேட்கின்றனர். இது எனக்கு மிக சந்தோஷத்தை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்குள்ள மக்கள் பேசும் மொழியை கற்றுக்கொண்டு, அவர்களின் கலாசாரத்தை கற்றுக்கொண்டு அவர்களில் ஒருவராக வாழத் தொடங்கிவிட்டால், வாழ்க்கையில் அனைத்தும் வெற்றியே.
- நமது நிருபர் -

