/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கர்நாடகாவின் 'பொம்மை நகரம்' சென்னபட்டணா
/
கர்நாடகாவின் 'பொம்மை நகரம்' சென்னபட்டணா
ADDED : அக் 04, 2025 11:04 PM

ஒவ்வொரு மாவட்டத்திற்கு அதன் சிறப்பை பறைசாற்றும் வகையில் பெயர் வைக்கப்படும். அது போன்று பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னபட்டணாவுக்கு, 'பொம்மை நகரம்' என்று பெயர் உள்ளது.
தமிழகம் கும்பகோணத்தின் தலையாட்டி பொம்மை போன்று, கர்நாடகாவின் மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகள், வளையல்கள், ஆடும் குதிரைகள் தயாரிக்கப்படும் நகரமாக சென்னபட்டணா திகழ்கிறது. இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மரப்பொம்மை தயாரிக்கும் கலைஞர்கள் உள்ளனர். 200 ஆண்டுகளுக்கு முன், திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் துவங்கியதாக நம்பப்படுகிறது.
18ம் நுாற்றாண்டு மைசூரை 18ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்தவர்களுக்கு, பெர்சியாவில் இருந்து ஒரு அரக்கு மரப்பொம்மை பரிசாக வழங்கப்பட்டதாம். கைவினை பொருட்களால் ஈர்க்கப்பட்ட அவர், உள்ளூர் கலைஞர்களுக்கு கைவினை பயிற்சி அளிக்கும் வகையில், பெர்சியாவில் இருந்து கைவினை கலைஞர்களை அழைத்து வந்தாராம்.
அது போன்று, ஆங்கிலேயர்களால் 19ம் நுாற்றாண்டில் மைசூருக்கு இயந்திர கருவிகள் கொண்டு வரப்பட்டன. இதனால் கைவினை தொழில் வளர்ந்தது.
திப்பு சுல்தானும், ஹைதர் அலியும் புதிய இயந்திரங்களை பரிசோதித்து பார்க்க விரும்பினர். பொம்மைகள் தயாரிப்பதில் 'லேத்'களை பயன்படுத்துவதை ஊக்குவித்து உள்ளனர். கடந்த 2006ல் சென்னபட்டணாவுக்கு 'புவிசார் குறியீடு சான்றிதழ்' கிடைத்தது.
புதிய கண்ணோட்டம் வெவ்வேறு மரங்கள் மூலமும் பொம்மை பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சந்தை போட்டிக்கு நிகராக பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த துறையில் ஏற்பட்ட மாற்றம், கைவினை கலைஞர் சமூகத்திற்கும், சென்னபட்டணா நகருக்கும் புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பியபடி மர வேலைப்பாடுகளுடன் கிடைக்கிறது. நகரின் முழு தொழிலுக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
பாரம்பரிய பொம்மைகளில் இருந்து உள் அலங்காரத்துக்கான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மசாலா பெட்டிகள், உப்பு, மிளகு பெட்டி, கடைகள் மாட்டும் கோட் ஹேங்கர்கள், சாவி சங்கிலிகள், மொபைல் ஸ்டாண்டுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2010ல் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தன் மனைவி மிஷலுடன் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது புதுடில்லியில் உள்ள தேசிய கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி அருங்காட்சியகத்தில், வண்ணமயமான சென்னபட்டணா பொம்மைகைளை வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது
- நமது நிருபர் - .