/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியும் தித்திக்கும் 'மாண்டியா'
/
சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியும் தித்திக்கும் 'மாண்டியா'
சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியும் தித்திக்கும் 'மாண்டியா'
சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியும் தித்திக்கும் 'மாண்டியா'
ADDED : அக் 04, 2025 11:05 PM

கர்நாடகாவில் உள்ள முக்கியமான மாவட்டங்களில் ஒன்று மாண்டியா. இங்கு சர்க்கரை அதிகமாக தயாரிக்கப்படுவதால், மாண்டியாவை கர்நாடகாவின் 'சர்க்கரை கிண்ணம்' என அழைக்கின்றனர்.
மாண்டியாவில் திரும்பும் திசை எல்லாமே கரும்புகளாகவே காட்சி அளிக்கும். ஆண்டுதோறும் கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பின்னால் பல அரசு, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் உள்ளது.
மின்சாரம் மாண்டியாவில் பல தொழிற்சாலைகள் இருந்தாலும், முதன் முறையாக 1933ல், 'மைசுகர்' சர்க்கரை ஆலையை, நான்காம் கிருஷ்ணராஜ உடையார் நிறுவினார். காலப்போக்கில் கர்நாடகா அரசு கையகப்படுத்தி கொண்டது. தற்போதும் இந்த ஆலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலை மூலம் மட்டுமே, ஒரு ஆண்டுக்கு பல்லாயிரம் கிலோ சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபத்தில் பிரபல தனியார் நிறுவனமான பதஞ்சலி தன் புதிய ஆலையை திறந்தது. இந்த ஆலையும் மிகவும் பிரபலமான சர்க்கரை ஆலையாக மாண்டியாவில் உள்ளது. சர்க்கரை தயாரிக்கப்படும் கரும்புகளின் கழிவை வைத்து, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மாண்டியாவில் கரும்புகளை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. இவர்கள் காவிரி, ஹேமாவதி நதிகளை நம்பியே விவசாயம் செய்கின்றனர். விவசாயிகளுக்கு அரசு கடன் உதவி, உதவித்தொகை வழங்குகிறது. இந்த கரும்புகள் வளருவதற்கு 10 முதல் -12 மாதங்கள் ஆகும்.
இதையடுத்தே கரும்புகள் அறுவடை செய்யப்படுகின்றன. இந்த கரும்புகள் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு, பல நடைமுறைகளுக்கு பின் கரும்புகளிலிருந்து சர்க்கரை உருவாக்கப்படுகிறது. இங்கு, ஆண்டுக்கு சராசரியாக 4.50 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.
எத்தனால் வருங்காலத்தில் மாண்டியாவை எத்தனால் உற்பத்தி மையமாக மாற்ற மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இது வெற்றி அடைந்தால், சர்க்கரைக்கு பிரபலமாக இருக்கும் மாண்டியா, எத்தனாலுக்கும் பிரபலமாகும்.
மாண்டியாவில் சர்க்கரையை போலவே, இங்கு தயாரிக்கப்படும் வெல்லமும் பிரபலமானது. கலப்படமற்ற வெல்லத்தை சுவைக்க பலரும் விரும்புவர். அதனாலே, இங்கு தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு மவுசு அதிகம். இது தவிர பனை வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவையும் பிரபலமானவை.
மாண்டியாவின் சர்க்கரை உற்பத்தி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; இம்மாவட்டத்தின் வாழ்வாதாரமாகவும், கலாசார அடையாளமாகவும் விளங்குகிறது.
இது விவசாயி, தொழிற்சாலை மற்றும் அரசாங்கம் என மூவரின் ஒத்துழைப்பால் நிலைத்திருக்கக்கூடிய துறை. வருங்காலத்தில் தொழில்நுட்ப மேம்பாடுகள், நீர்நிலை மேலாண்மை மற்றும் நிலையான விலை ஆகியவை மூலம் மாண்டியாவின் சர்க்கரை துறை மேலும் வளர்ச்சி பெறும் என்பது உறுதி.
அது மட்டுமின்றி மாண்டியாவை வெறும் மாநிலத்தின் வரலாறோடு மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. மாண்டியாவிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை தேசத்திற்கும் உபயோகமாக இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்
- நமது நிருபர் - .