இயற்கை விவசாயத்தில் வித்தை காட்டும் சிதானந்த பவார்
இயற்கை விவசாயத்தில் வித்தை காட்டும் சிதானந்த பவார்
UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 06:54 PM

- நமது நிருபர் -: பெலகாவி மாவட்டம், முதலகி தாலுகா ராஜாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதானந்த பவார், 39, விவசாயி. இவர் தனது சிறுவயதிலிருந்தே விவசாயம் செய்து வருகிறார். இயற்கை முறை விவசாயத்திற்கு பெயர் பெற்றவர். ரசாயனம் மற்றும் வீரிய விதைகளை விதைக்காமல் நாட்டு விதைகளை விதைத்து, இயற்கை முறையில் விவசாயம் செய்வதில் கைதேர்ந்தவர்.
இவர் தன் இரண்டரை ஏக்கர் நிலத்தில் பப்பாளி பயிரிட்டார். இதனுடன் ஊடுபயிராக கீரை, தக்காளி, மிளகாய், வாழை, தர்பூசணி போன்றவற்றையும் பயிரிட்டு உள்ளார்.
இந்த ஆண்டில் அவர் பயிரிட்ட அனைத்தும் அறுவடைக்கு தயாராகி விட்டன. 1 லட்சம் கிலோ பப்பாளி சாகுபடி செய்யப்பட உள்ளது. இதிலிருந்து, 12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என நம்புகிறார். மற்ற ஊடுபயிர்களிலிருந்து, 3 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட திட்டமிட்டு உள்ளார்.
கோகாக் தாலுகா இயற்கை விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினராக இவர் உள்ளார். இந்த சங்கத்தின் மூலம் வியாபாரிகள் தேவைக்கேற்ப விவசாயம் செய்வார்.
இதனால், இவருக்கு நஷ்டம் ஏற்படுவதில்லை. இம்முறை அறுவடையின் மூலமாக, 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட உள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கோகாக் இயற்கை விவசாயிகள் சங்கம், 2007ல் நிறுவப்பட்டது. நான் அந்த சங்கத்தில் சேர்ந்ததன் மூலம் இயற்கை விவசாயத்தை துவங்கினேன். துவக்கத்தில் இரண்டை ஏக்கரை முழுதுமாக ஒரே பயிரையே பயிரிட்டேன். 2017ம் ஆண்டிலிருந்து ஒரே சமயத்தில் பல பயிர்களை நடவு செய்தேன். இதனால், எனக்கு ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்ட துவங்கினேன்.
இயற்கை விவசாயிகள் தங்களுக்கென சங்கத்தை துவங்கினால், பல வியாபாரிகள் நேரடியாக பயிர்களை வாங்குவர். விதை விதைப்பதற்கு முன்பே, பயிரின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. அதுபோல, பயிர்களுக்கு நோய் வந்ததும் கவலைப்படுவதற்கு பதிலாக, நோய் வராமல் தடுக்க செய்வது குறித்து ஆராய வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் எடுக்க வேண்டும். இதுவே விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தாரகை மந்திரமாகும். நான் சொந்தமாக பால் பண்ணையும் வைத்து உள்ளேன். 10 மாடுகள், 20 ஆடுகள், 30 கோழிகளும் உள்ளன. இதிலிருந்தும் வருமானம் ஈட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
