UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 06:54 PM

- நமது நிருபர் -
மூன்று வயது கூட நிரம்பாத சிறுமி, தபேலா வாசித்து அசத்துகிறார். தன் அற்புத திறமையால், இந்திய சாதனை புத்தகத்தில், இடம் பிடித்துள்ளார்.
சங்கீதம் கற்க பொறுமை, மனதை ஒரு நிலைப்படுத்துவது, கடினமான பயிற்சி அவசியம். வெவ்வேறு தாளங்களை அடையாளம் கண்டு, வாசிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், 3 வயது கூட நிரம்பாத ஸ்வரஸ்ரீ ஹெக்டே, தபேலாவில், 12 தாளங்களை வாசித்து, ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார்.
உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரா நகரில் வசிக்கும் ஸ்வரஸ்ரீ ஹெக்டேவின் வயது, 2 ஆண்டுகள், 10 மாதமாகும். இவருக்கு இந்த வயதில் இசையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இவரது தந்தை குருராஜ் ஹெக்டே, தபேலா கலைஞர். தாய் ஸ்ரீலதா ஹிந்துஸ்தானி பாடகி, ஆங்கில பேராசிரியையாக பணியாற்றுகிறார். குருராஜ் ஹெக்டே, தன் தந்தை வித்வான் சேஷாத்ரி அய்யங்காரின் சீடர்.
குருராஜ் ஹெக்டே - ஸ்ரீலதா தம்பதி, ஹொன்னாவராவில் இசைப்பள்ளி நடத்துகின்றனர். இங்கு, 50க்கும் மேற்பட்டோர், பயிற்சி பெறுகின்றனர். இசை குடும்பத்தில் பிறந்ததால், ஸ்வரஸ்ரீக்கு ஒரு வயதிலேயே, இசையில் ஆர்வம் ஏற்பட்டது. மற்றவருக்கு தந்தை தபேலா பயிற்சி அளிக்கும் போது, ஸ்வரஸ்ரீ பக்கத்தில் அமர்ந்து, உன்னிப்பாக கவனிப்பார். தானும் தபேலாவை வாசிக்க பழகினார்.
மகளின் ஆர்வத்தை புரிந்து கொண்ட பெற்றோர், இரண்டு தபேலாக்கள் செய்து கொடுத்தனர். தந்தை தன் சீடர்களுக்கு, கற்றுத்தரும் போது, அருகில் அமர்ந்து கவனித்த ஸ்வரஸ்ரீக்கு, 12 தாளங்களை கற்பித்த போது, விரைவில் கற்றுக்கொண்டு வாசித்து காட்டி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
இதை பார்த்த பலரும், இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சிக்கும்படி, ஆலோசனை கூறினர்.
குருராஜ் ஹெக்டேவும், மகள் தபேலா வாசிப்பதை வீடியோவில் பதிவு செய்து, இந்திய சாதனை புத்தக நிறுவனத்திற்கு அனுப்பினார். இந்திய சாதனை புத்தக அமைப்பின் அதிகாரிகள், ஹொன்னாவராவுக்கு வந்து, சிறுமியின் திறமையை ஆய்வு செய்தனர். 12 தாளங்களை சிறுமி தபேலாவில் வாசிப்பதை கண்டு, ஆச்சர்யம் அடைந்தனர். அதன்பின் அவருக்கு அதிகாரப்பூர்வமாக சான்றிதழும், பதக்கமும் வழங்கினர்.
இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஸ்வரஸ்ரீக்கு, பாராட்டு குவிந்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலம், பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஸ்வரஸ்ரீயின் பெற்றோர் கூறியதாவது:
எங்கள் மகள் இவ்வளவு சிறிய வயதில், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது, மிகவும் பெருமையாக உள்ளது. மகள் விளையாட பல விளையாட்டு பொருட்கள் இருந்தாலும், அவற்றில் சிறிது நேரம் மட்டுமே விளையாடுவார். அதன் பின் தபேலாவை எடுத்து கொள்வார்.
சிறிதாக, இரண்டு தபேலாக்களில் அவர் பயிற்சி பெற்றார். 12 தாளங்களை, அற்புதமாக வாசிக்கிறார். தபேலா வாசித்து முடித்த பின், கையை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்பதை, அவருக்கு புரியும் வகையில் கற்றுக்கொடுத்தோம். தன் திறமையால் சாதனை செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
