ADDED : ஜூலை 19, 2025 11:22 PM

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது பழமொழி. தேவையில்லை என, வீசி எறியும் பொருட்களையும் பயனுள்ளதாக மாற்றலாம். இதற்கு ஆர்வமும், புத்தி கூர்மையும் வேண்டும். இதற்கு கலபுரகி மாவட்டத்தின், வாடி உள்ளாட்சி முன்னுதாரணமாக விளங்குகிறது.
பிளாஸ்டிக் என்பது, மனிதர்களின் வாழ்க்கையில், பிளாஸ்டிக் என்பது பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. குறைந்த விலைக்கு கிடைப்பதால், மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை வாங்குகின்றனர். இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன; மாசுப்படுத்துகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு, விற்பனை மற்றும் தயாரிப்புக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையால் எந்த பயனும் இல்லை.
கலர் டைல்ஸ்
பிளாஸ்டிக் பொருட்களை, பயன் உள்ள பொருட்களாக உருவாக்கலாம் என்பதை, கலபுரகி மாவட்டத்தின் வாடி உள்ளாட்சி நிரூபித்துள்ளது. பொது மக்கள் பயன்படுத்தி வீசி எறியும் பிளாஸ்டிக் கன்டெய்னர், டின், பழைய டயர், மரத்துண்டுகளை பயன்படுத்தி, கலர் புல்லான டைல்ஸ் தயாரிக்கிறது. இந்த டைல்ஸ்கள் கலபுரகி மாவட்டத்தில் பிரபலம் அடைந்துள்ளது.
தொண்டு அமைப்புடன், உள்ளாட்சி ஒருங்கிணைந்து டைல்ஸ் தயாரித்து விற்பனை செய்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் என, வீடுகளில் சேகரித்து, தொண்டு அமைப்பிடம் ஒப்படைக்கிறது. இவற்றை தொண்டு அமைப்பு, ஹைதராபாத்தில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பி, டைல்ஸ்களாக மாற்றுகிறது. உள்ளாட்சியின் நடவடிக்கையை, கலபுரகி மாவட்ட நிர்வாகம் வெகுவாக பாராட்டியுள்ளது. இது மற்ற உள்ளாட்சிகளுக்கு முன் மாதிரியாக உள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
பிளாஸ்டிக் பொருட்களை அறிவியல் ரீதியில் அழிக்க வழியில்லை. இவற்றை மறு சுழற்சி செய்து, டைல்ஸ்களாக மாற்றுகிறோம்.
இந்த உள்ளாட்சியில் தினமும் 350 கிலோ பிளாஸ்டிக் உட்பட 14.5 டன் கழிவுகள் உருவாகின்றன. இவற்றை தரம் பிரித்து, பிளாஸ்டிக் பொருட்களை இயந்திரம் மூலமாக சுத்தம் செய்கிறோம்.
அலங்காரம்
அதன்பின் இவற்றை தொண்டு அமைப்புகள், ஹைதராபாத்தில் உள்ள டைல்ஸ் தொழிற்சாலைக்கு அனுப்புகிறது. அங்கு டைல்ஸ்கள் தயாரித்து வாடி உள்ளாட்சிக்கு அனுப்பப்படுகிறது. டைல்ஸ்கள் அழகானவை. வண்ண மயமாக உள்ளன. வீடுகளுக்கு பொருத்தினால் அலங்காரமாக இருக்கும். வீட்டின் அழகை அதிகரிக்கும்.
வீடுகளை அழகாக்க மட்டுமின்றி, சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தலாம். உள்ளாட்சியின் செயலை பாராட்டியுள்ள மாவட்ட நிர்வாகம், வாடியின் திடக்கழிவு நிர்வகிப்பு இடத்தில், டைல்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க தயாராகிறது.
இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட்ட பின், கலபுரகி மாவட்டத்தின் அனைத்து இடங்களில் இருந்தும், பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வரப்படும். தொழிற்சாலை அமைக்க 75 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
தற்போது தயாரிக்கப்படும் டைல்ஸ்களுக்கு, நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி சார்பில் அமைக்கப்படும் நடைபாதைகளுக்கு, இந்த டைல்ஸ்கள் பயன்படுத்த, அதிகாரிகளிடம், ஒப்புதல் கேட்டுள்ளோம். இத்தகைய டைல்ஸ் பொருத்தி அமைக்கப்படும் சாலைகளின் ஆயுட்காலம், 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -