/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
6,000 பாம்புகளை பிடித்த ஊர்க்காவல் படை வீரர்
/
6,000 பாம்புகளை பிடித்த ஊர்க்காவல் படை வீரர்
ADDED : ஜூலை 06, 2025 06:10 AM

ஹாவேரியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மாரென்னவர். இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். ஊர்க்காவல் படையில் பணிபுரிந்தாலும், இவருக்கு பாம்புகளின் மீது அக்கறை அதிகம். இதன் காரணமாக, ஹாவேரி நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், எந்த வீடுகளில் பாம்புகள் சிக்கினாலும், அதை மீட்டு வனத்தில் விடும் புனிதமான வேலையை செய்து வருகிறார்.
இதை கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறார். கட்டு விரியன், ராஜ நாகம், மலை பாம்புகள் என கொடிய விஷமுள்ள பாம்புகளை தன் உயிரைப் பணயம் வைத்து, காப்பாற்றி வருகிறார். இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட வாங்குவது கிடையாது.
தனது பணியை முடித்த பின், யார் வீட்டிலாவது பாம்புகள் சிக்கி இருக்கிறது என அழைப்பு வந்தால், உடனே அங்கு சென்று பாம்புகளை மீட்கும் வேலை செய்து வருகிறார்.
இதுவரை 6,000க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு உள்ளார். சில சமயங்களில் பாம்புகளை பிடிக்க செல்லும் போது, அவற்றின் உடம்பில் காயம் காணப்பட்டால், அவைகளுக்கு முதலுதவியும் செய்து வருகிறார்.
மேலும் பாம்புகள் பிடிக்க போகும் இடத்தில் மக்களிடம் பாம்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். விஷமுள்ள பாம்புகள்; விஷமற்ற பாம்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார். இதனால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி, பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் பாம்புகள் குறித்து பாடம் நடத்துகிறார். பாம்பு கடித்தால் செய்ய வேண்டியது குறித்தும் கற்பிக்கிறார்.
இதனால், இவர் வசிக்கும் பகுதியில் ஹூரோவாக வலம் வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:
இந்த பூமியில் அனைத்து உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. பாம்பை கண்டால் அடிக்க வேண்டாம்; உடனடியாக வனத்துறைக்கு தகவல் அனுப்பவும். அதை, அப்படியே விட்டுவிடுங்கள்.
குறிப்பாக மே முதல் ஜூன் வரையில் பாம்புகள் இனப்பெருக்கம் செய்து குட்டியிடும். இந்த சமயங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .