/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
வெற்றிலை சாகுபடியில் அசத்தும் ஜாபர்சாப்
/
வெற்றிலை சாகுபடியில் அசத்தும் ஜாபர்சாப்
ADDED : ஏப் 27, 2025 05:39 AM

கர்நாடகாவின் வடமாவட்டமான கதக்கில் கோடை காலம் சுட்டெரித்து வருகிறது. நீர்நிலைகளில் இருக்கும் தண்ணீரும் குறைந்து வருவதால், விவசாயத்திற்கு என்ன செய்வது என்று விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆனாலும் வெற்றிலை சாகுபடியில் கதக்கின் லட்சுமேஸ்வரை சேர்ந்த ஜாபர்சாப் அசத்துகிறார்.
பெருமையுடன் அவர் கூறியதாவது:
கதக், லட்சுமேஸ்வர் பகுதியில் திராட்சை சாகுபடி தான் அதிகம். மருத்துவ குணம் கொண்ட வெற்றிலை சாகுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
இதற்கு அதிக உரம் தேவைப்படுகிறது. கதக் மாவட்டத்தில் கால்நடைகள் அதிகம் இருப்பதால், உரத்திற்கு எந்த பற்றாக்குறையும் இருப்பது இல்லை.
ஒரு ஏக்கர் நிலத்தில் வெற்றிலை சாகுபடி செய்து உள்ளேன். சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் செய்வதால், தண்ணீருக்கு எந்த பிரச்னையும் இதுவரை ஏற்படவில்லை.
மே மாதம் வெற்றிலை கொடிகளை நடுவதற்கு சிறந்த மாதமாக உள்ளது. ஒவ்வொரு வெற்றிலை கொடிகளின் இடையில், குறைந்தது ஐந்து அடியாவது இடைவெளி வேண்டும்.
முடிந்த அளவிற்கு ரசாயன உரம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இயற்கை உரம் தான் இந்த பயிருக்கு உயிர். தற்போது 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை, வெற்றிலை அறுவடை செய்யப்படுகிறது.
எனது தோட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வெற்றிலையை கர்நாடகாவின் பிற மாவட்டங்களும், மஹாராஷ்டிரா, ஆந்திராவிற்கும் ஏற்றுமதி செய்கிறேன். ஆண்டிற்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
விவசாயம் மூலம் தன்னிறைவு வாழ்க்கை கிடைக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும், இன்றைய பட்டதாரிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வாழ்வில் முன்னேறலாம் என்பது எனது அழைப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

