/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
காலத்திற்கேற்றவாறு மாறுகிறது மெஜஸ்டிக் பஸ் நிலையம்
/
காலத்திற்கேற்றவாறு மாறுகிறது மெஜஸ்டிக் பஸ் நிலையம்
காலத்திற்கேற்றவாறு மாறுகிறது மெஜஸ்டிக் பஸ் நிலையம்
காலத்திற்கேற்றவாறு மாறுகிறது மெஜஸ்டிக் பஸ் நிலையம்
ADDED : ஜூலை 12, 2025 11:08 PM

பெங்களூரு நகரின் இதய பகுதியாக இருப்பது மெஜஸ்டிக் பஸ் நிலையம். அண்டை மாநிலங்களில் இருந்து வருவோருக்கு பெங்களூரின் மற்ற பகுதிகள் தெரிகிறதோ, இல்லையோ மெஜஸ்டிக் பஸ் நிலையம் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். அந்த அளவுக்கு பெயர் பெற்று உள்ளது.
சென்னை, கோடம்பாக்கம் திரை உலகினரின் சொர்க்கமாக இருப்பது போன்று, பெங்களூரு காந்தி நகர் கர்நாடக திரை உலகினரின் சொர்க்கமாக உள்ளது. இந்த காந்திநகர் தொகுதியில் தான் மெஜஸ்டிக் பஸ் நிலையம் உள்ளது.
பிழைப்பு தேடி இங்கு வந்து பெரிய நபர்கள் ஆன திரையுலகினர் கூட மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் தங்கி இருந்ததற்கான உதாரணம் உள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ரவி பஸ்ரூர் கூட, மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இரவு தங்கி இருந்து, வாய்ப்பு தேடியதை பற்றி கூறி உள்ளார்.
பிழைப்பு தேடி வருவோர் கூட, மெஜஸ்டிக் பஸ் நிலைய நடைபாதையில் கடை போட்டு சம்பாதித்து வருகின்றனர். 'மெஜஸ்டிக்' என்ற பெயரில் திரைப்படம் வெளியானது.
கெம்பேகவுடா
மெஜஸ்டிக் பஸ் நிலையம் அமைந்து உள்ள இடம், முன்பு ஏரியாக இருந்தது. கடந்த 1965ல் இங்கு பஸ் நிலையம் கட்டுமான பணிகள் துவங்கி 1969ல் முடிந்தது. முதலில் நகருக்குள் இயங்கும் பஸ்கள் மட்டும், இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயங்கின.
நாளடைவில் கர்நாடகாவின் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும் இங்கிருந்து இயங்க ஆரம்பித்தன.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ்கள் கூட பஸ் நிலையத்தின் வெளிப்புற பகுதியில் இருந்து செல்கின்றன.
பெங்களூரை நிர்மாணித்த கெம்பேகவுடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது பெயரில் இந்த பஸ் நிலையம் செயல்படுகிறது. ரயில் நிலையத்திற்கு நேர் எதிரில், சிட்டி ரயில் நிலையம் அமைந்து உள்ளது. இங்கிருந்து பல மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மெஜஸ்டிக் பஸ் நிலையம் கட்டி தற்போது 55 ஆண்டுகள் ஆகி விட்டதால், பழமையான பஸ் நிலையமாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு அழகு சேர்க்கும் வகையில், பஸ் நிலையத்தை மொத்தமாக உருமாற்ற அரசு முடிவு செய்து உள்ளது.
திட்ட அறிக்கை
'புராஜெக்ட் மெஜஸ்டிக்' என்ற பெயரில் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை பல அடுக்கு கொண்ட மையமாக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளது. பொது - தனியார் ஒருங்கிணைப்புடன், இந்த பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பயணியருக்கு சீரான போக்குவரத்தை வழங்கும் வகையிலும், பயணியருக்கு புதிய அனுபவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வணிக வளாகம், உணவு விற்பனை நிலையம், அலுவலக பகுதிகளை இங்கு கொண்டு வரும் திட்டமும் உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
டெண்டர்
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:
நான் கடந்த முறை போக்குவரத்து அமைச்சராக இருந்த போதே, 2016ல் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தின் உருவத்தை மாற்ற திட்டமிட்டோம். ஆனால் சில காரணங்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
தற்போது மெஜஸ்டிக்கில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்கள் தினமும் 10,000 டிரிப்புகள், கே.எஸ்.ஆர்.டி.சி., 3,000 டிரிப்புகளை மேற்கொள்கிறது. சாந்திநகர் பஸ் நிலையம் பாணியில் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை வடிவமைக்கும் திட்டம் உள்ளது. இன்னும் நான்கு, ஐந்து மாதங்களில் டெண்டருக்கு அழைப்பு விடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -