/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ஒரே நாளில் 38 பாம்புகளை பிடித்து சாதனை மைசூரு ஸ்டார் 'ஸ்னேக்' ஷியாம்
/
ஒரே நாளில் 38 பாம்புகளை பிடித்து சாதனை மைசூரு ஸ்டார் 'ஸ்னேக்' ஷியாம்
ஒரே நாளில் 38 பாம்புகளை பிடித்து சாதனை மைசூரு ஸ்டார் 'ஸ்னேக்' ஷியாம்
ஒரே நாளில் 38 பாம்புகளை பிடித்து சாதனை மைசூரு ஸ்டார் 'ஸ்னேக்' ஷியாம்
ADDED : ஜூலை 19, 2025 11:24 PM

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் பால சுப்பிரமணியா, 58. கடந்த 48 ஆண்டுகளாக பாம்புகளை பிடித்து வருகிறார். இதுவரை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து, அவற்றை வனப்பகுதியில் விடுவித்து உள்ளார்.
இவரது சேவையை மாநில அரசு முதல் பாமர மக்கள் வரை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு மைசூரு வட்டாரத்தில் பிரபலமாக உள்ளார். இவரை பால சுப்பிரமணியா என்ற பெயரை விட, 'ஸ்னேக் ஷியாம்' என சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும்.
அறிமுகமே வேண்டாம்
இதுவே, இவரைப்பற்றிய சிறிய அறிமுகம் என கூறலாம். உண்மையில் இவருக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவுக்கு பிரபலமானவர். பா.ஜ., வில் இணைந்தார். 2013 முதல் 2018 வரை மைசூரு மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்தார். இயற்கை ஆர்வலராக பல ஊர்களுக்கு செல்கிறார். மரங்கள், பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கன்னட பிக் பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று உள்ளார். இன்டர்நேஷனல் தனியார் டி.வி., நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார்.
இவரது வாழ்க்கை பயணம் குறித்து, அவர் கூறிய ஓரிரு வார்த்தைகள்:
நம் நாட்டின் பழங்காலத்தில் இருந்தே பாம்புகள் வணங்கப்படுகின்றன. எனக்கு 10 வயதாக இருக்கும் போது, முதன் முதலில், 1977 ல் பாம்புகளை விளையாட்டு தனமாக பிடித்து மீட்டேன்.
இதையடுத்து, பாம்புகளை பிடித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விடுவது குறித்து அறிந்தேன். அன்றிலிருந்து, இன்றுவரை பாம்புகளை மீட்டு வருகிறேன். கடந்த 48 ஆண்டுகளாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு உள்ளேன். ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேரின் வீடுகளிலிருந்து பாம்புகளை பிடிக்கும் படி அழைப்பு வருகிறது.
நமது கடமை
பாம்புகளின் இடங்களை மக்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், அவை மக்களின் வீடுகளுக்குள் குடி புகுகிறது. நாடு முழுவதும் பாம்புகளை மீட்பவர்கள் உள்ளனர். இதனால், பாம்புகள் காப்பாற்றப்படுகின்றன. பாம்புகளால் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுகிறது. பாம்புகளே நிலத்தை பாதுகாக்கும் பாதுகாவலர்கள். எனவே, பாம்புகளை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.
விவசாயிகள் பயிரிடும் உணவு தானியங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை எலிகள் சாப்பிட்டு அழிக்கின்றன. இந்த எலிகளை பாம்புகள் வேட்டையாடுகின்றன. இதிலிருந்து பாம்புகளின் தேவையை புரிந்து கொள்ளலாம்.
குரங்குகள், பாம்புகளை கண்டால் பயப்படும். மனிதரிடம் குரங்குகளின் மரபணு உள்ளதால், நாமும் பாம்புகளை பார்த்து பயப்படுகிறோம். 2011 டிசம்பர் 12 ம் தேதியன்று ஒரே நாளில் 38 பாம்புகளை பிடித்தேன். இதுவே, அதிகபட்சமாக நான் ஒரே நாளில் பிடித்த பாம்புகளின் எண்ணிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -