/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மூக்கு நுனியில் ஓவியம் வரையும் நாகராஜ்
/
மூக்கு நுனியில் ஓவியம் வரையும் நாகராஜ்
ADDED : ஜூலை 06, 2025 06:11 AM

ஓவியம் வரைவது ஒரு கலை. நன்கு பயிற்சி பெற்ற ஓவிய கலைஞர்களால் மட்டுமே, பிரமாண்ட ஓவியங்களை வரைய முடியும். கையில் ஓவியம் வரையும் போது, ஏதாவது ஒரு இடத்தில் பிழை ஏற்படலாம். ஆனால் வாலிபர் ஒருவர் எந்த பிழையும் இன்றி, மூக்கின் நுனியை பயன்படுத்தி ஓவியம் வரைந்து அசத்துகிறார்.
ராம்நகரின் மாகடி தாலுகா கூடூர் கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் - லட்சுமி தம்பதியின் மகன் தேவராஜ், 28. டிப்ளமோ இன்ஜினியரான இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்து உள்ளார்.
இவரது ஆர்வத்தை கண்ட பள்ளி ஆசிரியை ஷில்பா என்பவர், தேவராஜை ஊக்குவித்தார். மனதில் தோன்றியதை ஓவியங்களாக வரைந்து நண்பர்கள், ஆசிரியர்களுக்கு கொடுத்து உள்ளார். அவரது ஓவியங்கள் கவர்ந்து போன நண்பர்கள், ஆசிரியர்கள் தேவராஜை பாராட்டி உள்ளனர். இது அவரை ஊக்கப்படுத்துவதாக மாறி உள்ளது.
கல்லுாரியில் படிக்கும் போது, ஓவிய வகுப்புக்கு சென்ற தேவராஜ், மூக்கின் நுனியில் ஓவியம் வரையும் பயிற்சியும் எடுத்து உள்ளார். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான தேவராஜ், புனித் ராஜ்குமார் படத்தை மூக்கின் நுனியில் தலைகீழாக வரைந்து உள்ளார்.
அதுவும் 30 நிமிடங்களில். முயற்சியாக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸுக்கு அனுப்பி வைத்தார்.
தேவராஜை கவுரவிக்கும் வகையில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அவருக்கு விருது வழங்கி கவுரவித்து உள்ளது. திரைப்பட கலைஞர் விலாஸ் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தேவராஜ், எதிர்காலத்தில் ஓவியத்தில் கின்னஸ் சாதனை படைக்க விரும்புவதாகவும் கூறி உள்ளார்.
- நமது நிருபர் -