/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கால்கள் இல்லாத நாய்களுக்கு 'கால்களாக' மாறிய 'ரோர்'
/
கால்கள் இல்லாத நாய்களுக்கு 'கால்களாக' மாறிய 'ரோர்'
கால்கள் இல்லாத நாய்களுக்கு 'கால்களாக' மாறிய 'ரோர்'
கால்கள் இல்லாத நாய்களுக்கு 'கால்களாக' மாறிய 'ரோர்'
ADDED : ஜூலை 26, 2025 11:10 PM

நாய்களை கவனித்து கொள்ள பல்வேறு அமைப்புகள் உள்ளன. ஆனால், மாற்றுத்திறனாளியாக உள்ள நாய்களுக்கு 'கால்களாக', ரோர் என்ற அமைப்பு செயல்படுகிறது.
பெங்களூரு துமகூரு சாலையில் ரோர் என்ற 'ரெமிஸ் ஆர்கனைசேஷன் பார் அனிமல் ரிேஹபிலிடேஷன்' என்ற அமைப்பு உள்ளது.
இது குறித்து அமைப்பின் ஆனந்த் பெருமையுடன் கூறியதாவது:
நானும், என் நண்பன் முரளியும் 2012ல் சென்னையில் இருந்த போது, புறநகர் பகுதியில் சாலை ஓரத்தில் படுகாயம் அடைந்த நாய் ஒன்று நடக்க சிரமப்பட்டதை கவனித்தோம்.
ரெமி அதனை மீட்டு, கால்நடை மருத்துவமனையில் கொண்டு காண்பித்தோம். நாயின் முதுகெலும்பு உடைந்து, கால்களும் செயலிழந்ததால், இனி நடக்க முடியாது என்று டாக்டர்கள் கூறினர். நாயின் நிலையை பார்த்த நானே, அதை வளர்க்க முடிவு செய்தேன். அதற்கு 'ரெமி மார்ட்டின்' என்று பெயர் வைத்தேன்.
என் நண்பர்கள் ஆதரவால், இதுபோன்ற நாய்களை காப்பாற்ற முடிவு செய்தேன். நாய்களை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது என்பது குறித்து ஆன்லைனில் படித்து தெரிந்து கொண்டேன். இதன் மூலம் ரெமி மார்டினை கவனித்து கொண்டேன். ரெமிக்காக 'வீல்சேர்' தயாரித்தேன். அதை மாட்டிய பின் ரெமியின் நடை அடடா... என்று தோன்றியது. இதை பார்த்த என் சகோதரி, வீல் சேரை பரிசளித்தார்.
மும்பைக்கு 2014 ல் சென்றிருந்த போது, வாகனம் மோதி படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் இருந்த நாயை மீட்டு, நாய்கள் பராமரிப்பு மையத்தில் சேர்த்தேன். ஆனால் அது மிகவும் கோபமாகவே இருந்தது. யாரையும் நெருங்க விடவில்லை. ஒரு நாள், ஒரு விஷயமாக மீண்டும் அம்மையத்துக்கு சென்ற போது, மும்பையில், நான் மீட்ட நாயை பற்றி கேட்டபோது, 'மிகவும் கோபமாக இருக்கிறது' என்றனர். 'நான் வளர்க்கட்டுமா' என்று கேட்டபோது, அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
பவுன்சர் என் வீட்டுக்கு கொண்டு வந்து 'பவுன்சர்' என்று பெயர் சூட்டினேன். கடுமையான தொற்று காரணமாக, அதன் பின்னால் உள்ள இடது கால் அகற்றப்பட்டது.
எங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்த ரெமி, 2015 ல் பித்தப்பையில் இருந்த கட்டியால் உயிரிழந்தான். 'ரெமி' பயன்படுத்திய வீல்சேர், பவுன்சருக்கு மாட்டினேன். இதை மாட்டிய பின், மற்ற நாய்கள் ஓடுவதை பார்த்து சந்தோஷமடைந்தது.
இதுபோன்று கேரளாவில் இருந்து 2016 ல் 'குட்டன்' என்ற பெயரிலான நாயை கொண்டு வந்தேன். இருவரும் விரைவிலேயே நண்பர்களாக மாறினர்.
இதுபோன்ற நாய்களை, நாம் ஏன் பராமரிக்க கூடாது என்று தோன்றியது. இதற்காக, 2018 ல் ரோர் என்ற அமைப்பை உருவாக்கினேன். தமிழகம் கிருஷ்ணகிரியில் உள்ள தேன்கனிக்கோட்டையில் சிறிய ஷெட் அமைத்து, 15 நாய்களை பராமரித்து வந்தோம்.
நாய்களை கவனித்து கொள்ள முழு நேர ஊழியராக பிரதீப் நியமிக்கப்பட்டார். பெங்களூரு, சென்னை, மும்பை உட்பட பல நகரில் முதுகெலும்பு உடைந்து நடக்க முடியாத நாய்களை கொண்டு வந்து வளர்த்து வருகிறோம்.
இந்த ஷெட்டில் நாய்களை வளர்க்க போதிய இடம் இல்லாமல் இருந்தது. பெங்களூரு துமகூரு சாலையில் 60 மாற்றுத்திறனாளி நாய்களை கையாளும் வகையில் இந்த அமைப்பு, 2022 ல் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
வரி விலக்கு இங்கு நான்கு பேர், முழு நேர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த அமைப்பின் டிரஸ்டிகளாக நான், ஸ்ரேயா, பாச்சி ஆகியோர் உள்ளோம். 'செயலற்ற தத்தெடுப்பு' திட்டத்தின் மூலம், அனைத்து நாய்களுக்கும் அன்பான நன்கொடையாளர்கள் கிடைத்து உள்ளனர்.
'செஸ்னா லைப்லைன் கால்நடை சுகாதார பராமரிப்பு பிரைவேட் லிமிடெட் உடனான எங்கள் தொடர்பால், நாய்களுக்கு அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை, பிசியோதெரபி, ஹைட்ரோதெரபி உட்பட பல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கும் வகையில், வருமான வரி துறையிடம் இருந்து '80ஜி' சான்றிதழை பெற்றுள்ளோம். சிறப்பான கவனிப்பு தேவைப்படும் நாய்களுக்கு மேம்பட்ட மறுவாழ்வு மையத்தை அமைக்க புதிய நிலம் வாங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விபரங்களுக்கு www.roarindia.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- நமது நிருபர் -