ADDED : டிச 21, 2025 05:15 AM

: உத்தர கன்னடா மாவட்டம் சித்தாபூர் தாலுகாவில் உள்ள சோவினகொப்பா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் சுற்றுச்சூழல் கிளப்பில் இணைந்து உள்ளனர். அதாவது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விஷயங்கள் குறித்து அறிந்து, அதை அப்படியே வாழ்வியலில் பின்பற்றுவதே, இந்த கிளப்பின் நோக்கமாகும்.
குப்பை இந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில், குப்பைகளை கண்ட இடத்தில் போடுவதில்லை. குப்பையை தொட்டியில் தான் போடுவர். அதுவும், மக்கும் குப்பை, மக்கா குப்பை என்பதை தரம் பிரித்து போடக்கூடிய அளவுக்கு அறிவுடன் செயல்படுகின்றனர். இதை, ஆசிரியர்கள் பார்த்து மனதார பாராட்டி வருகின்றனர்.
இவர்கள் கடந்த செப்டம்பரில் விவசாய நிலங்களுக்கு சென்று, விவசாயம் எப்படி செய்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து அறிந்தும் கொண்டனர். அவர்களும் விவசாயம் செய்ய முடிவு செய்தனர். நெல் பயிர்களை பயிரிட்டனர். ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட வயலின் சிறு பகுதியில் மாணவர்கள் நெல் பயிரிட்டனர்.
அதன்படி, விவசாயிகள் உதவியுடன் ஆசிரியரின் மேற்பார்வையோடு, சிறிய பாதங்களை சேற்றிற்குள் விட்டவாறு, நெல் பயிரிட்டனர். பிஞ்சு கைகள் விவசாயம் செய்வதை பார்த்த விவசாயிகள் ஆனந்த கண்ணீர் விட்டனர். மாணவர்களை மனதார பாராட்டினர்.
அறுவடை இந்த பயிர்கள் இம்மாதம் அறுவடைக்கு தயாராகின. மாணவர்கள் வயலுக்கு சென்று நெற் கதிர்களை, கத்தியை பிடித்து அறுவடை செய்தனர். அவர்களுக்கு எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளும் கற்றுக் கொடுத்தனர்.
இதன்படி, அவர்களுக்கு ஆசைக்கும், தங்களால் முடிந்த அளவு பயிர்களை அறுவடை செய்து அசத்தினர்.
இந்த அனைத்து நிகழ்வுகளின் போதும் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்தவாறே இருந்தனர். இதை பார்த்து மகிழ்ந்த விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் அரிசியில், ஒரு சிறு பங்கை பள்ளிக்கு தருவதாக உறுதியளித்தனர்.
இந்த அரிசியை வைத்து மாணவர்களுக்கு உணவு செய்து தரும்படி அன்பு கட்டளையிட்டனர். இதை கேட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். இந்த சம்பவம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இதை பற்றியே ஊருக்குள்ளும் பேச்சு அடிபடுகிறது. அனைவரும் மாணவர்களையும், அரசு பள்ளி நிர்வாகத்தையும் மனதார பாராட்டுகின்றனர்
- நமது நிருபர் -.

