/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
விதைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த மாணவியர்
/
விதைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த மாணவியர்
ADDED : செப் 13, 2025 11:13 PM

இன்றைய காலகட்டங்களில், பெண்கள் பல துறைகளில் சாதிக்கின்றனர். எந்த துறையையும் விட்டு வைக்கவில்லை. தற்போது விவசாயத்தில் பயன்படும் சாதனங்களை கண்டுபிடித்து சாதனை செய்கின்றனர். பெலகாவியை சேர்ந்த இரண்டு மாணவியர், விதைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
பெலகாவி மாவட்டம், காக்வாட் தாலுகாவின், உகாரகுர்தா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா காபஷி. பெலகாவி நகரின் அம்பேவாடி கிராமத்தில் வசிப்பவர் சாக்ஷிதுாபே. இவர்கள் இருவரும் பெலகாவியின் மராத்தா மண்டலியின் பொறியியல் கல்லுாரியின், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் ஏழாவது செமஸ்டர் படிக்கின்றனர்.
கல்லுாரி பேராசிரியர், புராஜெக்கட் தயாரிக்கும்படி மாணவியரிடம் கூறினார். இவ்விரு மாணவியருக்கும் விவசாயத்தில் ஆர்வம் அதிகம். இவர்கள் விவசாயத்துக்கு பயன்படும் சாதனத்தை கண்டுபிடிக்க விரும்பினர். அதே போன்று நிலத்தில் விதைக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த இயந்திரத்துக்கு, 'சோ ரைட்' என பெயர் சூட்டியுள்ளனர். இவர்களின் திறமையை அடையாளம் கண்ட மத்திய அரசு, மாணவியர் தயாரிப்புக்கு காப்புரிமை அளித்துள்ளது.
மாணவியர் சாக்ஷி மற்றும் ஸ்வேதா கூறியதாவது:
விதை நிலத்தில் எந்த அளவில் விழ வேண்டும் என்பதை, மென்பொருளில் டிசைன் செய்து கொண்டோம். அதன்பின் இயந்திரத்தை தயாரிக்க துவங்கினோம். ஒவ்வொரு விதையாக விதைக்கும் வகையில் இயந்திரத்தை உருவாக்கினோம். சைக்கிள் ஹேண்ட் மூலமாக, ஒரே நபர் எளிதில் இயந்திரத்தை தள்ளிக்கொண்டே விதைக்க முடியும்.
இந்த இயந்திரத்தை தயாரிக்க, இரண்டு மாதங்களாகின. தயாரித்த பின் இயந்திரத்தை சோதித்து பார்த்தோம். அது வெற்றி அடைந்தது. விதைக்கும் இயந்திரத்துக்கு மெட்டல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்பட்டன. இதில் மெட்டாலிக் பிளேட் சக்கரம், மோட்டார், அரை கிலோ விதையை வைக்க கூடிய 'சீட் ஹூபர்' என, அனைத்து வசதிகளும் உள்ளன.
ரிசார்ஜல் லிதியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று செல்கள் போடப்பட்டுள்ளன. சார்ஜ் காலியான பின், மீண்டும் ரிசார்ஜ் செய்ய வேண்டும். ஒரு சைக்கிள் சக்கரம், இரண்டு ஹேண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நிலத்தை தோண்ட ஒரு ஷார்ப் எட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தினால், விதை வீணாகாது. வரிசையாக விதைக்கலாம். யாருடைய உதவியும் இல்லாமல், ஒருவரே இந்த பணியை செய்யலாம். கூலியாட்கள் பற்றாக்குறை பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். 4 மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்கலாம்.
இதை இயக்க எரிபொருள் தேவைப்படாது. வீட்டில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். சிறிய விவசாயிகளுக்கு இயந்திரம் மிகவும் உதவியாக இருக்கும். தற்போதைக்கு பட்டாணி, சோளம் விதைக்கும் பிளேட் பொருத்தியுள்ளோம். வரும் நாட்களில், விவசாயிகள் விதைக்கும் அனைத்து விதைகளின் பிளேட் பொருத்தும் வகையில், இயந்திரத்தை தயாரிப்போம். சார்ஜிங்குக்கு பதிலாக சோலார் மின்சாரத்தில் இயங்க செய்வோம்.
எங்களின் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை அளித்துள்ளது. நாங்களே தொழிற்சாலை அமைத்து, இயந்திரங்கள் தயாரித்து, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்குவோம். எங்களுடன் அரசு கைகோர்த்தால், மிகவும் உதவியாக இருக்கும்.
நாங்கள் விவசாயியின் மகள்கள். எங்கள் நிலத்தில் விதைக்கும்போது, கூலியாட்கள் கிடைக்காமல் பிரச்னை ஏற்பட்டது. இயந்திரங்கள் வாங்க, எட்டு முதல் 10 லட்சம் ரூபாய் செலவானது. சிறிய விவசாயிகளால் இவ்வளவு செலவிட முடியாது. இதற்கு தீர்வு காண ஆலோசித்தோம். அதே நேரத்தில், கல்லுாரியில் புராஜெக்ட் செய்யும்படி கூறினர். குறைந்த செலவில் இந்த இயந்திரத்தை தயாரித்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவியரின் சாதனையை, கிராமத்தினரும், கல்லுாரி நிர்வாகமும் பாராட்டியுள்ளனர், பெருமைப்படுகின்றனர்
- நமது நிருபர் - .