தன் சொந்த செலவில் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் ஆசிரியர்
தன் சொந்த செலவில் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் ஆசிரியர்
ADDED : ஜூன் 27, 2026 11:09 PM

- நமது நிருபர் -:
ஹாவேரி மாவட்டம் ரத்திஹள்ளி தாலுகாவில் உள்ள லிங்கதேவரகொப்பா அரசு உயர் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தன் சொந்த பணத்தில் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயரில் வங்கியில் 'டிபாசிட ் ' செய்து, சுற்றுலா அழைத்து செல்கிறார்.
கடந்த, 2024 செப்டம்பரில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மாரதெப்பா சேர்ந்தார். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை உணர்ந்த அவர், அதை அதிகரிக்க திட்டமிட்டார்.
இதற்காக, இப்பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவரின் பெயரிலும், வங்கியில், 1,111 ரூபாய் டிபாசிட் செய்தார். கடந்தாண்டு இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த நான்கு மாணவர்களின் பெயரிலும் வங்கியில், 1,111 வைப்பு தொகை செலுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு படிக்கும் போது மாணவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் தெரியும். ஏழை மாணவர்களுக்கு பயனளிக்கும், அவர்களை கற்க ஊக்குவிக்கும் இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
இந்தாண்டு ஒன்றாம் வகுப்பில் மூன்று பேர், இரண்டாம் முதல் ஏழாம் வகுப்பில் ஒன்பது பேர் என, 12 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பெயரில், தலா 1,111 ரூபாய் செலுத்த உள்ளேன். 5 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, ஹாவேரி மாவட்டத்திற்கு என் சொந்த செலவில் கல்வி சுற்றுலா அழைத்து செல்கிறேன். குழந்தைகளை ஊக்குவிக்கவும், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இத்திட்டத்தை மேற்கொண்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராமத்தினர் கூறியதாவது:
ஆசிரியர் வந்த பிறகே பள்ளியின் சூழல் மாறி உள்ளது. பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும், அவர், 1,111 ரூபாய் வைப்பு தொகை செலுத்துகிறார். பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 1 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கிறார். இதனால் பள்ளியில் குழந்தைகளின் வருகை அதிகரித்து உள்ளது. மேலும், இந்த பள்ளியில் இருந்து வேறு இடங்களுக்கு மாறிய மாணவர்களும், மீண்டும் இதே பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். தலைமை ஆசிரியரின் பணி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
