/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பத்தாது... பத்தாது... சாதனை பத்தாது!
/
பத்தாது... பத்தாது... சாதனை பத்தாது!
ADDED : ஏப் 27, 2025 05:37 AM

பள்ளி மாணவர்கள் பலரும் ஆன்லைனில் நேரத்தை செலவிடும் போது, பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், ஆங்கில நாவல் எழுதி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். அவர் எழுதிய நாவல், வெளிநாட்டினர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பள்ளி படிக்கும் போது, எப்படி நாவலை எழுதினார் என்பதை பார்ப்போமா.
பெலகாவி, பீரனாவாடியில் உள்ள கே.எல்.எஸ்., பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரணவ் சஷிபூஷன், 15. இவரது பெற்றோர் சஷிபூஷன் - சாவித்திரி. இவரது சொந்த ஊர் சிக்கமகளூரு. மருந்து கடை நடத்தும் தந்தையின் தொழில் காரணமாக, தற்போது பெலகாவியில் பள்ளி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
இவர் புத்தக வாசிப்பில் 'தீரா காதல்' கொண்டார். மற்ற மாணவர்கள் போல் இல்லாமல், பாடப்புத்தகங்களை தாண்டி, சிறுவர்களுக்கான கதை புத்தகங்கள் போன்றவற்றை சிறுவயதில் இருந்தே படித்து வந்தார்.
ஹாரி பாட்டர்
ஏழாம் வகுப்பு படிக்கும் போது, பிரபல ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான ஜெ.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர்' புத்தகத்தை படிக்க துவங்கினார். அந்த புத்தகத்தில் கூறப்படும், கதாபாத்திரங்களை பற்றிய சிந்தனையில் மூழ்கினார்.
இதனால், தன்னை அறியாமல் 'ஹாரி பாட்டர்' உலகிற்கு சென்றவர், அந்த புத்தகத்தில் உள்ள ஏழு தொகுதிகளையும் படித்து முடித்தார். இதன் பிறகு, ஆங்கில நாவல்களின் மீதான ஈர்ப்பு அதிகமானது. அடுத்து 'தி ஷேடோ ஆப் நன்' என்ற நாவலை படித்தார்.
அந்த சமயத்தில், ஏன் நாமே ஒரு நாவல் எழுதக்கூடாது என நினைத்து உள்ளார். கனவை நனவாக்கும் வகையில், காரியத்திலும் இறங்கினார். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது, நாவல் எழுத துவங்கினார்.
இது குறித்து, தன் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் எடுத்த எடுப்பிலே சம்மதம் தெரிவித்தனர். இது இவருக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது.
எழுதியது எப்படி?
பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை முடித்து விட்டு, தினமும் இரவு 40 நிமிடங்கள் வரை செலவிட்டு, ஒரு நாளைக்கு 5 முதல் 6 பக்கங்கள் வரை எழுதினார். இப்படியே, தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கும் மேல் எழுதி புத்தகத்தை நிறைவு செய்தார்.
இதற்கு ' தி ரஸ்டட் ரிடுல்' எனும் பெயர் வைத்தார். புத்தகத்தின் கதைக்கரு, ஒரு 15 வயது சிறுவனின் பெற்றோர், யாரோ ஒருவரால் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால், இது தற்கொலை எனப்படுகிறது. இந்நிலையில், தன் பெற்றோரை கொலை செய்தவரை, 15 வயது சிறுவன் எப்படி கண்டுபிடிக்கிறான்' என்பதே கதை.
இந்த புத்தகத்தை, கடந்த மார்ச் மாதம் 'அமேசான் கிண்டில்' என்ற இணைய தளத்தில், விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மின் புத்தகம் 360 ரூபாய்க்கும்; அச்சு புத்தகம் 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இப்புத்தகம் குறித்து பலரும் நல் கருத்துகளை தெரிவித்தனர். மேலும், ஐந்து நட்சத்திர குறியீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, இப்புத்தகதம் வெளிநாட்டவர்களாலும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
3
- நமது நிருபர் -