/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
லட்சக்கணக்கான மக்களை சுமக்கும் 'பெங்களூரின் இதயம்!'
/
லட்சக்கணக்கான மக்களை சுமக்கும் 'பெங்களூரின் இதயம்!'
லட்சக்கணக்கான மக்களை சுமக்கும் 'பெங்களூரின் இதயம்!'
லட்சக்கணக்கான மக்களை சுமக்கும் 'பெங்களூரின் இதயம்!'
ADDED : ஏப் 27, 2025 07:04 AM

யார் எந்த ஊரில் இருந்து பெங்களூரு வந்தாலும், மெஜஸ்டிக் வராவிட்டால் அவர்களின் பெங்களூரு பயணம் நிறைவடையாது. பெங்களூரு நகருக்கு மெஜஸ்டிக் பஸ் நிலையம், கலசம் போன்றதாகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்க்கை வண்டியை நகர்த்துகின்றனர்.
எண்ணிலடங்கா மக்களுக்கு, வாழ்வளிக்கும் பெங்களூரு என்ற பெயரை கேட்டால், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது மெஜஸ்டிக். பல தலைமுறை மக்களை தவிர, இன்றைய காலத்தின் பலருக்கு மெஜஸ்டிக்கின் பின்னணி தெரியாது.
இந்த பெயர் எப்படி வந்தது என்பதும் தெரியாது. பஸ் நிலையம் வருவதற்கு முன், அங்கு என்ன இருந்தது என, தெரிந்தால் சுற்றுச்சூழலுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு நடந்துள்ளது என்பது தெரியும்.
ஏரிகள்
'மெஜஸ்டிக்' என்ற பெயர் எப்படி வந்தது என்பதை அறியும் முன், இங்கு என்ன இருந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். பெங்களூரு ஒரு காலத்தில் ஏரிகளின் நகராக இருந்தது.
அன்றைய மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் ஏரிகளை உருவாக்கினர். 19 மற்றும் 20ம் நுாற்றாண்டில், மெஜஸ்டிக் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான ஏரிகள் இருந்தன. நகர் வளர, வளர ஒவ்வொரு ஏரியாக மாயமானது.
ஏரிகள் மூடப்பட்டு வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள், பிரம்மாண்ட கட்டடங்கள், கடைகள், பஸ் நிலையம் உட்பட, பல்வேறு வர்த்தக மையங்கள் கட்டப்பட்டன.
பஸ் நிலையம்
தற்போது பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில், இதற்கு முன் பெரிய ஏரி இருந்தது. அதன் பெயர் தர்மாம்புதி ஏரி. சரியாக நிர்வகிக்காததாலும், அரசியல்வாதிகளின் அலட்சியத்தாலும், ஏரி வற்றி போனது. எனவே அந்த ஏரியை மூடி, அதன் மீது பஸ் நிலையம் கட்டினர். இதை அன்றைய முதல்வர் குண்டுராவ் கட்டினார்.
அந்த காலத்தில் பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடே ஏற்பட்டது இல்லை. ஏரிகள் நகரை செழிப்பாக வைத்திருந்தன. இத்தகைய ஏரிகளை வளர்ச்சி என்ற பெயரில் அழித்துள்ளனர்.
அடுத்த தலைமுறையினருக்கு தேவையான ஏரி, இன்று பஸ் நிலையமாக மாறியுள்ளது.
இப்பகுதிக்கு மெஜஸ்டிக் என்ற பெயர் காரணமாக இருந்தது திரையரங்கு என்பது, பலருக்கு தெரியாது. இங்கு பெரும்பாலான திரையரங்குகள் இருந்தன. இவற்றில் சில திரையரங்குகள் மூடப்பட்டன.
இதற்கு முன் கெம்பேகவுடா பஸ் நிலைய பகுதியில், மெஜஸ்டிக் என்ற திரையரங்கு இருந்தது. இது 1920ல் கட்டப்பட்டது. இந்த திரையரங்கு மிகவும் பிரசித்தி பெற்றதால், இப்பகுதி அதே பெயரில் அடையாளம் காணப்படுகிறது.
கெம்பேகவுடா பஸ் நிலையம் என்ற பெயரே, மக்களுக்கு மறந்துவிட்டது. இந்த பெயரில் குறிப்பிட்டால் பலருக்கும் தெரிவது இல்லை. மெஜஸ்டிக் என்றால் மட்டுமே அடையாளம் தெரியும்.
தியேட்டர்கள்
எந்த புதிய திரைப்படங்கள் வெளியானாலும், மெஜஸ்டிக்கில் உள்ள சந்தோஷ், அனுபமா, திரிவேணி, நர்த்தகி என, பல திரையரங்குகளில் திரையிடப்படும். திரைப்படங்களை காண நடிகர், நடிகையர் இங்கு வருவர். பல திரைப்படங்களின் படப்பிடிப்பு மெஜஸ்டிக்கில் நடந்துள்ளன. இந்த பெயரில் ஒரு திரைப்படமும் திரைக்கு வந்துள்ளது.
மெஜஸ்டிக் என்ற கெம்பே கவுடா பஸ் நிலையம், ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையமாகும். கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி., மற்றும் தனியார் பஸ் நிலையம் என, மூன்றும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
இதன் அருகிலேயே அக்கிபேட், பலேபேட், சிக்பேட் உள்ளன. சுற்றிலும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல், தங்கும் விடுதிகள் இங்குள்ளன.
தற்போது மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையமும் வந்துள்ளது. எப்போதும் இப்பகுதியில் மக்கள் நெரிசலை காணலாம்.
- நமது நிருபர் -

