/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ஆண்டு முழுதும் கிடைக்கும் தாய்லாந்து மாம்பழம்
/
ஆண்டு முழுதும் கிடைக்கும் தாய்லாந்து மாம்பழம்
ADDED : செப் 07, 2025 02:33 AM

நாட்டில் கோடிக்கணக்கான லாபம் கொழிக்கும் தொழில்கள், ஏராளமாக இருந்தாலும் விவசாயத்துக்கு தனியிடம் உள்ளது. விவசாயமும், விவசாயிகளும் நம் நாட்டின் முதுகெலும்பு. சமீப ஆண்டுகளாக வானிலை மாற்றம், மழை பற்றாக்குறை, விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வன விலங்குகளின் தொல்லை என பல்வேறு காரணங்களால் விவசாயத்தில் ஆர்வம் குறைகிறது.
இத்தகைய சூழ்நிலை இருந்தாலும் நன்கு கல்வி கற்று கை நிறைய சம்பளம் வாங்கினாலும், அந்த வேலையை விட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபடுவோரும் இருப்பது ஆறுதலான விஷயமாகும். இவர்களில் நவீன் மங்கனவரும் ஒருவர். இவரது தோட்டத்தில் ஆண்டு முழுதும், மாம்பழம் கிடைக்கும். விவசாயத்தில் இவர் அற்புதமான சாதனை செய்துள்ளார்.
கோடைக்காலம் பொதுவாக கோடைக்காலத்தில் மட்டுமே அல்போன்சா, மல்கோவா, மல்லிகா, செந்துாரா, தோத்தாப்புரி, ரசப்புரி, பங்கனபள்ளி என பல விதமான மாம்பழங்களின் சீசன் இருக்கும்.
மற்ற நாட்களில் இருக்காது. மாம்பழ பிரியர்கள், கோடைக்காலம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் நவீனின் தோட்டத்தில் ஆண்டு முழுதும் மாம்பழங்கள் விளைகின்றன. இவர் தாய்லாந்து ரக மாம்பழங்களை விளைவிக்கிறார். தன் இலக்கை எட்ட அவர் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்.
விஜயபுரா மாவட்டத்தின் சிவனகி கிராமத்தை சேர்ந்தவர் நவீன், 45. மாம்பழ விளைச்சலில் சாதனை செய்துள்ளார். இவரது தோட்டம் சுற்றுலா இடமாக உள்ளது. தினமும் சுற்றுலா பயணியர், விவசாயத்துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் வருகின்றனர்.
இது குறித்து, நவீன் கூறியதாவது:
பெங்களூரில் நெட் ஒர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பணி நிமித்தமாக 2011ன் டிசம்பரில் தாய்லாந்துக்கு சென்றிருந்தேன். அந்த நேரத்தில் புத்தம் புது மாம்பழங்கள் விற்கப்படுவதை கண்டு ஆச்சரியமடைந்தேன். பழம் மிகவும் சுவையாக இருந்தது. நமது நாட்டில் குளிர் காலத்தில் மாம்பழங்கள் விளையாது. தாய்லாந்தில் எப்படி விளைந்திருக்க முடியும் என நினைத்தேன்.
50 விதம் இது பற்றி நன்கு தெரிந்து கொள்ள விரும்பினேன். மூன்று முறை தாய்லாந்துக்கு சென்றேன். அங்குள்ள விவசாயிகளை சந்தித்து, விவசாய தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டேன். தாய்லாந்து விவசாயிகள் அனைத்து பருவ காலங்களிலும், 50 விதமான மாம்பழங்களை விளைவிக்கின்றனர்.
அவர்களால் முடியும் போது, நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. விஜயபுராவில் தாய்லாந்து மாம்பழத்தை விளைவிக்கும் முயற்சியில் இறங்கினேன்.
என் முயற்சியை என் பெற்றோரும், உறவினர்களும் ஆதரிக்கவில்லை. மாம்பழத்தை விளைவிக்கும் விஷயத்தில் நான் பைத்தியமாகிவிட்டேன் என கிண்டல் செய்தனர். நமது மண்ணின் தரம் மற்றும் வானிலை மாற்றத்தால், இந்த பழங்கள் விளையாது என, எச்சரித்தனர். ஆனால் நான் மனம் தளராமல் முடிவில் உறுதியாக நின்றேன்.
கடந்த 2021ல் தாய்லாந்தில் இருந்து 1,000 செடிகளை வாங்கி வந்து தன் தோட்டத்தில் நட்டார். செடிகள் புதிய மண் மற்றும் வானிலையால், 350 செடிகள் உலர்ந்தன. இதை பொருட்படுத்தாமல் மற்ற செடிகளை பாதுகாத்தேன். ரசாயரண உரம் பயன்படுத்தாமல், பசுவின் சாணம் உட்பட இயற்கை உரங்களை பயன்படுத்தினேன்.
என் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஒவ்வொரு செடியும் நான்கைந்து அடி உயர மரமாக வளர்ந்துள்ளன. ஒரு மரத்தில் குறைந்தபட்சம் இரண்டு டஜன் மாம்பழங்கள் விளைகின்றன.
3,000 மரங்கள் மரங்கள் மேலும் வலுவானால், ஆறு முதல் ஏழு டஜன் பழங்கள் கிடைக்கும். இப்போது என் தோட்டத்தில், 3,000 மரங்கள் உள்ளன. பழங்களை பழுக்க வைக்க, ரசாயனம் பயன்படுத்துவதில்லை. மரத்திலேயே இயற்கையாக பழுக்கின்றன. இதன் நறுமணம், தரம், சுவை மிகவும் அதிகம். ஆண்டு முழுதும் பலன் கிடைக்கிறது.
என் தோட்டத்துக்கு விவசாயிகள், மாணவர்கள், விவசாய வல்லுநர்கள், சுற்றுலா பயணியர், அதிகாரிகள் என, பலர் வருகின்றனர். என்னிடம் தகவல் பெறுகின்றனர். விவசாயிகள் ஒரு லட்சம் ரூபாய் செலவிட்டால், தாய்லாந்து பழங்களை விளைவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -