ADDED : ஜூலை 06, 2025 06:09 AM

- நமது நிருபர் -
கலபுரகி டவுன் வாடி சாலையில் வசிப்பவர் ஹனுமந்த் தேவனுார். இவரது மனைவி பசம்மா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். ஆட்டோ ஓட்டும் ஹனுமந்தும், கூலி வேலை செய்யும் பசம்மாவும் சேர்ந்து, கலபுரகி டவுனில் வசிக்கும் தொழு நோயாளிகளுக்கு உணவு, மருந்து வழங்குவது உள்ளிட்ட சேவை செய்கின்றனர்.
மனம் திறந்து ஹனுமந்த் கூறியதாவது:
எனது அம்மாவுக்கு தொழுநோய் பாதிப்பு இருந்தது. இதனால் அம்மாவை, அப்பா கை விட்டார். கோவில் முன்பு பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் பணத்தில் என்னை வளர்த்தார். மருந்து வாங்க கூட அவரிடம் பணம் இருந்தது இல்லை. தொழுநோயால் அவர் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்து வளர்த்து உள்ளேன்.
இதுபோன்று எனது மனைவி பசம்மாவின் பெற்றோரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களும் நிறைய கஷ்டங்களை அனுபவித்து உள்ளனர். உறவினர்கள் கூட ஒதுக்கி வைத்தனர். தற்போது எனது தாயும், மனைவியின் பெற்றோரும் உயிருடன் இல்லை.
அவர்கள் இறக்கும் முன்பு 'தொழுநோயால் பாதிக்கப்பட்டு கைவிடப்படுவோருக்கு உதவி செய்யுங்கள்' என்று தங்கள் கடைசி ஆசையாக கூறி விட்டு சென்றனர்.
மனதிருப்தி
இதனால் தொழுநோயாளிகளுக்கு நானும், மனைவியும் சேர்ந்து எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறேன். தினமும் 20 தொழுநோயாளிகளுக்கு சாப்பாடு வழங்குகிறேன். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுக்கிறோம்.
தொழுநோயாளிகள் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். கலபுரகி கங்காபுராவில் தொழுநோயாளிகள் குழந்தைகளுக்கான பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் இதுவரை, பல குழந்தைகளை சேர்த்து உள்ளேன். தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வது மனதிற்கு திருப்தி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடைசி மூச்சு
ஹனுமந்தா மனைவி பசம்மா கூறியதாவது:
தொழுநோயாளிகள் குடும்பத்தில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க கூட, சில இடங்களில் டாக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தங்களுக்கும் தொழுநோய் பரவி விடும் என்று நினைக்கின்றனர். நான் 50 பெண்களுக்கு பிரசவம் பார்த்து உள்ளேன். எனக்கு எதுவும் வரவில்லை.
சாலையில் வசிக்கும் தொழுநோயாளிகளுக்கு தினமும் எனது கையால் சமையல் செய்து கொடுக்கிறேன். இந்த புண்ணியம் எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தொழுநோயாளிகள் படும் கஷ்டம் என்று எனக்கு நன்கு தெரியும். பெற்ற பிள்ளைகள் கூட நடுத்தெருவில் விட்டு சென்று விடுகின்றனர்.
'நீங்கள் தான் எங்கள் பிள்ளைகள்' என்று என்னையும், கணவரையும் பார்த்து தொழுநோயாளிகள் கூறும் போது, எங்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விடும். எங்கள் கடைசி மூச்சு வரை தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.